செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அயோத்தி தீர்ப்பு- ஷியா வக்பு வாரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2019-11-09 05:34 GMT   |   Update On 2019-11-09 05:34 GMT
அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.

கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.



இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் அயோத்தி நிலம் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, நிலத்துக்கு உரிமை கோரி ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது. ஒரு மத நம்பிக்கை பிற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக்கூடாது. மதங்களில் இருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மதிக்கிறது. மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு.

அமைதியை காக்கும் வகையிலும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது’ என தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News