செய்திகள்
வெங்காயம்

விலையை கட்டுப்படுத்த துபாய், எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி

Published On 2019-11-09 05:28 GMT   |   Update On 2019-11-09 06:45 GMT
துபாய், எகிப்து, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
  • வருகிற 30-ந்தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
  •  துபாயில் இருந்து 2 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய டெண்டரை வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை சில நாட்களாகவே உயர்ந்த வண்ணம் உள்ளது. பருவம் தவறிய மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு மேல் விற்றது. பல மாநிலங்களில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை ஆகிறது.

இதையடுத்து வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெங்காயத்தை பதுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வருகிற 30-ந்தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து துபாய், எகிப்து, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.



அதன்படி வெங்காயங்களை ஏற்றிய முதல் கப்பல் வருகிற 15-ந்தேதி வர வாய்ப்பு உள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் துபாயில் இருந்து 2 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய டெண்டரை வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள், வெங்காயங்களை வெளிநாடுகளில் இறக்குமதி செய்வதற்காக அவசரகால அடிப்படையில் துருக்கி, எகிப்து நாடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News