செய்திகள்
பாபர் மசூதி

அயோத்தி - 6 நூற்றாண்டு கால பிரச்சினைக்கு இன்று தீர்வு

Published On 2019-11-09 04:04 GMT   |   Update On 2019-11-09 04:05 GMT
அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வர இருக்கும் நிலையில், கி.பி 1528 முதல் 6 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடக்கும் மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டுகிறது.
அயோத்தியில் ராம பிரான் பிறந்ததாக கருதப்படுகிறது. வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பண்டைய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை ‘பிறந்த இடம்‘ அல்லது ‘ஜென்மபூமி’ என்று பல இடங்களில் குறிப்பிடுகின்றன. 5-ம் நூற்றாண்டிற்கு பிறகு அயோத்தி வனாந்திரமாக மாறியது என்று அரசிதழ் ஆவணங்கள் கூறுகின்றன. மாமன்னர் பாபரின் ஆணைக்கிணங்க, அவரின் தளபதி ஒருவரால் 1528-ல், பாபர் மசூதி கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பல இதர நூல்கள் ஜென்மபூமியை (ராமர் பிறந்த இடம்) பற்றி குறிப்பிடும் அதே வேளையில் மசூதி பற்றி பேசுவதில்லை. வேறு சில ஆதாரங்கள், இந்த மசூதியை அவுரங்கசீப் கட்டியதாக சொல்கின்றன. 1766-ல் அந்த பகுதியில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் எழுதிய குறிப்புகளில் இப்படி கூறப்பட்டுள்ளது.

மசூதி பற்றிய மிக பழைய குறிப்புகள், முதலாம் பகதூர் ஷா ஜாபர் பற்றி அவரின் மகள் (அவுரங்கசீப்பின் பேத்தி) எழுதிய நூலில் உள்ளது.

மோதல்கள் பற்றிய மிகப் பழைய தரவுகள் 1850-களை சேர்ந்தவை. அப்போது இந்துக்கள் ஒரு குழுவாக பாபர் மசூதியை தாக்கினர். அதன் பிறகு அவ்வப்போது நடைபெற்ற மோதல்கள் பற்றிய தரவுகள் உள்ளன. இந்த மோதல்கள், 1980-களில் தான் பெரிய அளவுக்கு உருவெடுத்து, 1992 டிசம்பர் மாதம் 6-ந் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.

அதன் பிறகு நீதிமன்றங்களுக்கும், பேச்சுவார்த்தை மேசைகளுக்கும் இந்த பிரச்சினை நகர்ந்தது. ஆனால் ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. ஓய்வு பெற சில நாட்களே உள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை பற்றி இறுதி தீர்ப்பை அளிக்க இருக்கும் நிலையில், மோதலில் உள்ள பல்வேறு சமூகத்தினரால் புனித பூமியாக கருதப்படும் இந்த நிலத்தின் வரலாறு பற்றிய தொகுப்பு இது.

தீர்ப்பு எப்படி இருந்தாலும், தனது மந்திரிசபை சகாக்கள் யாரும் அதைப்பற்றி அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வர இருக்கும் நிலையில், கி.பி 1528 முதல் 6 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடக்கும் மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டுகிறது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் விளைவுகள் பலவிதமாக, நவீன இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, சமூக பொருளாதார அமைப்பை பாதிக்கும் விஷயமாக இருக்க வாய்ப்புள்ளது.

அயோத்தியில், இந்த ஆண்டு தீபாவளி அன்று, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷம் எழுப்பிய பெரும் கூட்டத்தினரால், நான்கு லட்சம் தியாஸ்கள் (மண் விளக்குகள்) ஏற்றப்பட்டன.

தீர்ப்பு வெளியானவுடன் அமைதியை நிலை நாட்ட, உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி மற்றும் பாசியாபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பெரிய அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்வ இந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இரண்டு அமைப்புகளும் ‘ஷவ்ரிய திவாஸ்’ (வீரத்தின் தினம்) மற்றும் ‘விஜய் திவாஸ்’ (வெற்றி தினம்) ஆகியவற்றை கொண்டாட திட்டமிட்டுள்ளன. டிசம்பர் 6 அன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நினைவு தினத்தை ‘துக்க தினமாக’ அனுசரிக்க முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) இதை ஒரு கருப்பு தினமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராம பிரான் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கருதும் இடத்தில், பாபர் மசூதியை மீண்டும் கட்டித் தர இந்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, கடந்த 25 வருடங்களாக காத்திருப்பதாக, பாபர் மசூதி செயற்குழுவின் தலைவர் கூறியதாக செய்தி அறிக்கைகள் சொல்கின்றன.

நான்கு சிவில் வழக்குகளில், 2010-ல் அலகாபாத்(பிரயாக்ராஜ்) ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட 14 மேல்முறையீடுகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வந்தது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா (குழந்தை ராமரின் பிரதிநிதியாக இந்து மகாசபை) ஆகிய மூவருக்கும் சமமாக பிரித்து அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பிற்கு எதிராக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

ராம பிரான் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்; அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்ததாகவும், அதை மாற்றி அமைத்து மசூதி கட்டப்பட்டதாகவும் பலவிதமான யூகங்கள் உள்ளன.

நவீன தொல்பொருள் ஆய்வு முறைகள் உருவாக்கப்படாத காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருதுகோள்கள் இவை என்று இந்து அமைப்புகள் மறுக்கின்றன.

2003-ல், அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ கிளை பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், இந்திய தொல்பொருள் துறை சர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டது.

பூமியை துளைக்கும் ரேடார் கருவியின் உதவியோடு இந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அனைத்து தொல்லியல் கண்டுபிடிப்புகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, அவற்றை இதற்கு முந்தைய கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு, கோவில் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே, தூண்கள், சுடுமண் சிலைகள், அடித்தளம் மற்றும் கலசம், ‘விஷ்ணு ஹரி ஷீலா பலக்’ என்ற கல்வெட்டு (இரு துண்டுகளாக) ஆகிய தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒரு கோவில் இருந்ததற்கான சூழ்நிலை ஆதாரங்கள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது ராம பிரான் பிறந்த இடம் என்பதை நிரூபிக்க, எதிர்ப்பாளர்கள் இந்த கண்டுப்பிடிப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கினர்.

இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து செய்யப்பட்ட முடிவுகளை ‘தேர்ச்சி பெற்ற, அறிவுத்திறன் மிக்க’ மனங்கள் செய்துள்ளன என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

1984-ல் அயோத்தி பிரச்சினை தலைப்பு செய்தியானது. ஆனால் 1949 டிசம்பர் மாதம் 22-ந் தேதி இரவு மற்றும் 23-ந் தேதி அதிகாலை நேரத்தில், பாபர் மசூதிக்குள், ராமர், லட்சுமணன் சிலைகள் வைக்கப்பட்ட போதே இதற்கான விதை விதைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தொடர்ச்சியான நீதிமன்ற உத்தரவுகளின் விளைவாக, ஒரு வாரம் கழித்து, மசூதியின் தலைவாசல் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. உள்ளே நுழைவதற்கு அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அந்த இடம் சர்ச்சைக்குரிய இடம் என்று காங்கிரசை சேர்ந்த அன்றைய உத்தரபிரதேச முதல்-மந்திரி கோவிந்த் வல்லப் பந்த் அறிவித்தார்.

இதை மென்மையான மதவாத அரசியலின் தொடக்கம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். வலிமையான சோசலிச தலைவர்களின் அழுத்தத்தில் இருந்த வல்லப் பந்த், தனது செல்வாக்கை நிலைநிறுத்த இதை முன்னெடுத்தார் என்று கருதுகின்றனர்.

1984-ல் ராஜீவ்காந்தி பிரதமரான பிறகு, அரசியல் நிர்ப்பந்தங்களின் காரணமாக மதவாத அரசியலை முன்னெடுக்க வேண்டிய சூழல் மீண்டும் உருவானது.

முஸ்லிம்களின் ஆதரவை பெற, தன்னை விவாகரத்து செய்த, இந்தூரை சேர்ந்த முக்கிய வக்கீலான கணவரிடம் இருந்து, ஜீவனாம்சம் மற்றும் மாத உதவி பெற்றுத்தரக் கோரி ஷா பானு தொடுத்த சர்ச்சைக்குரிய வழக்கில், 1985-ல் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை, ராஜீவ் காந்தி, பாராளுமன்றம் மூலமாக தலைகீழாக மாற்றி அமைத்தார்.

மத வேறுபாடின்றி அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பொருந்தும் என்று இந்த வழக்கில் 1985-ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ராஜீவ்காந்தி அரசு, இந்த முக்கிய தீர்ப்பை மாற்றி அமைக்க, முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை 1986-ல் நிறைவேற்றியது. காங்கிரஸ் அரசு, முஸ்லிம் தலைவர்களின் நம்பிக்கையை பெற செய்த முயற்சியாக இது பார்க்கப்பட்டது. ஆனால் பெருவாரியான இந்து சமூகத்தினர் இதை விரும்பவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று முத்திரை குத்தி, ராம ஜென்மபூமி பிரச்சினையை முன்னெடுக்க தொடங்கியது.

இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்கவும், இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை கண்டு அஞ்சிய ராஜீவ் காந்தி, பாபர் மசூதியின் பூட்டுக்களை திறக்க முடிவு செய்தார். இதில் தங்களின் பங்களிப்பு எதுவுமில்லை என்று மறுத்த காங்கிரஸ் கட்சி, பாசியாபாத் மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் இது முன்னெடுக்கப்பட்டது என்று கூறியது. ஆனால் இது சந்தர்ப்பவாதம் என்று பா.ஜ.க. கூச்சலிட்டது.

அதே நேரத்தில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி தலைமையிலான பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு பெருந்திரளான இயக்கத்தை கட்டமைக்க தொடங்கினர்.

இந்த பெருந்திரள் இயக்கத்தின் தொடர் முயற்சிகளின் இறுதி விளைவாக, 1992 டிசம்பர் மாதம் 6-ந் தேதி, வலதுசாரி காவி செயல்பாட்டாளர்களினால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

ராமர் கோவில் பற்றிய பெருந்திரளான உணர்வுகள் அதிகரித்து வருவதை, முக்கியமாக இந்தி பேசும் மாநிலங்களில் அதிகரிப்பதையும், அரசியல் துருவமயமாக்கலில் உருவான புதிய பரிமாணங்களையும் கண்டும், பாபர் மசூதி இடிப்பை தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் அவரின் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜனசங்கமாக இருந்து, பின்னர் 1980-ல் உருவாக்கப்பட்ட பா.ஜ.க., 1984 வரை ராம் ஜென்மபூமி மற்றும் அயோத்தி விவகாரத்தை முக்கிய செயல்திட்டமாக முன்னெடுக்கவில்லை. இந்துக்களுக்கு முக்கியமான நகரமான சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ஒரு ரத யாத்திரையை அரசியல் வெற்றிக்காக நடத்த அத்வானி திட்டமிட்டார்.

1991 பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. 120 இடங்களில் வெற்றி பெற்றது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான 5 வருட ஆட்சியை பா.ஜ.க. 1999-ல் அமைக்க இது வழிவகுத்தது.



10 வருட காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், பிரதமர் மோடி தேசிய உணர்வையும், தேசபக்தியையும் வலுவாக முன்வைத்தார். இது அயோத்தி பிரச்சினையை விட வலுவாக இருந்தது.

அரசியல் வித்தகர்களான முலாயம் சிங் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர், முஸ்லிம்களின் அந்நியமாதலை அறுவடை செய்தனர். கடுமையாக பிளவுபட்டிருந்த அரசியல் சூழலில், தங்களை ஒரு பலம் மிக்க மூன்றாவது மாற்று சக்திகளாக முன் வைத்தனர். பா.ஜ.க.வை மிக கடுமையாக எதிர்ப்பதில் உறுதியாக நின்றனர். 1990-ல் அத்வானியின் ரத யாத்திரை பீகாரை கடக்க முயன்றபோது, லாலு அவரை கைது செய்து, தன் வலிமையை நிரூபித்தார்.

அன்றைய உத்தரபிரதேச முதல்-மந்திரியான முலாயம் சிங், பா.ஜ.க.வின் ராமர் கோவில் திட்டத்திற்காக அயோத்தியில் குவிந்த, வலதுசாரி இந்து செயல்பாட்டாளர்களான கர சேகவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டார். சர்ச்சைக்குரிய இடத்தை யாரும் சென்றடைய முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது. 
Tags:    

Similar News