செய்திகள்
மகன் ஆதித்ய தாக்கரேயுடன் உத்தவ் தாக்கரே.

முதல்-மந்திரி பதவி: சிவசேனாவின் பிடிவாதம் ஏன்?- பரபரப்பு தகவல்கள்

Published On 2019-11-09 02:41 GMT   |   Update On 2019-11-09 02:41 GMT
முதல்-மந்திரி பதவிக்காக நடக்கும் பனிப்போரில் சிவசேனாவின் பிடிவாதம் அந்த கட்சிக்கு வெற்றியை தருமா? அல்லது பின்னுக்கு தள்ளுமா? என்று பொருந்திருந்து பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. விவசாயிகள் உழைப்பாளர் கட்சி மட்டுமே காங்கிரசுக்கு எதிராக ஒரு சில தொகுதிகளில் வெற்றிபெற்று வந்தது.

1980-ம் ஆண்டுக்கு பிறகு விவசாயிகள் உழைப்பாளர் கட்சியின் இடத்தை ஜனதா, பாரதீய ஜனதா கட்சிகள் பிடித்தன. எனினும் அந்த கட்சிகளால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை.

இந்த நிலையில் பால்தாக்கரே நிறுவிய சிவசேனா வேகமான வளர்ச்சியை கண்டது. முதல் முறையாக 1990-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது சிவசேனா 52 இடங்களிலும், பா.ஜனதா 42 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் 1995-ம் ஆண்டு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி காங்கிரஸ் கோட்டையை அகற்றி ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலில் சிவசேனாவுக்கு 73 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 65 இடங்களும் கிடைத்தன. சிவசேனாவை சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்-மந்திரி ஆனார். பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவியுடன் திருப்தி அடைந்தது.

அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் (2009 தவிர) சிவசேனா- பா.ஜனதா கூட்டணி காங்கிரசிடம் தோல்வியை தழுவினாலும் எல்லா தேர்தல்களிலும் சிவசேனா, பா.ஜனதாவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2014-ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா பெரிய அண்ணனாகவே விளங்கி வந்தது. பா.ஜனதாவை சேர்ந்த அத்வானி உள்பட எவ்வளவு பெரிய தலைவர்கள் மும்பை வந்தாலும் பால் தாக்கரேயை அவரது வீட்டிற்கு சென்றே சந்தித்து பேசிவந்தனர். மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருந்த போதும் கூட மராட்டியத்தில் சிவசேனா தான் வலிமையான கட்சியாக இருந்தது.

இந்தநிலையில் 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 2 கட்சிகளும் தனியாக தேர்தலை சந்தித்தன. இதில் பா.ஜனதா 122 இடங்களிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இது சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

செய்வதறியாமல் கையை பிசைத்து கொண்டு இருந்த சிவசேனா, பா.ஜனதாவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. மேலும் பா.ஜனதா ஒதுக்கிய இலாக்காக்களை வாங்கி கொண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மந்திரி சபையில் இடம்பிடித்தது.



சிவசேனாவுக்கு துணை முதல்-மந்திரி கூட வழங்கப்படவில்லை. சிவசேனா இதை பெரிய வீழ்ச்சியாக கருதியது. மேலும் கடைசி நேரத்தில் தனித்து போட்டியிட்டு பா.ஜனதா முதுகில் குத்தியதாக கருதியது. எனவே கடந்த 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த போதும் அந்த கட்சி சமயம் கிடைக்கும் போதெல்லாம் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தது. அவர்கள் பிரதமர் மோடியையும் கூட விட்டுவைக்கவில்லை.

எனினும் இந்துத்வா கொள்கையால் நடந்து முடிந்த பராளுமன்ற தேர்தலில் சிவசேனா, பாரதீய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அப்போதும் சிவசேனா, பாரதீய ஜனதாவை விட குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. பா.ஜனதா 23 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், சிவசேனா 18 இடங்களை கைப்பற்றியது.

இதேபோல நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனா 124 இடங்களில் களம் கண்டது. தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்தநிலையில் தேர்தல் முடிவு வந்தவுடன் சிவசேனாவுக்கு 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவிவேண்டும் என அக்கட்சி அறிவித்தது. இதற்கு பா.ஜனதா, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தர முடியாது என பகிரங்கமாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் போதே, மராட்டிய ஆட்சியில் சமபங்கு பற்றி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனாவும், அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று பாரதீய ஜனதாவும் கூறின.

இந்த மோதல் காரணமாக பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசு அமையாமல் போய் விட்டது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

முதல்-மந்திரி பதவி வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. முதல்-மந்திரி பதவியில் 20 ஆண்டுகளுக்கு மேல் இல்லாததால் மாநிலத்தில் தனது செல்வாக்கு சரிந்து வருவதாக சிவசேனா கருதுகிறது. குறிப்பாக தனக்கு கீழ் செயல்பட்ட பாரதீய ஜனதா தன்னை விட மிஞ்சுவதை சிவசேனா விரும்பவில்லை. தேசிய கட்சியான பாரதீய ஜனதாவின் வளர்ச்சியால் மாநிலத்தில் தனக்கு செல்வாக்கு இல்லாமல் போய் விடும் என்ற பயமும் சிவசேனாவுக்கு இல்லாமல் இல்லை.

முதல்-மந்திரி பதவியால் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும் என சிவசேனா நம்புகிறது.

இதேபோல முதல் முறையாக தேர்தல் அரசியலுக்கு வந்த பால் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்ற ஆசையும் அந்த கட்சிக்கு உள்ளது. எனவே தான் அந்த கட்சி முதல்-மந்திரி பதவியை பிடிக்க பிடிவாதமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் சிவசேனாவின் செயல்பாடுகள் அந்த கட்சிக்கு வெற்றியை தருமா? அல்லது பின்னுக்கு தள்ளுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
Tags:    

Similar News