செய்திகள்
அயோத்தியில் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பு படையினர் பரிசோதித்து அனுப்புவதை படத்தில் காணலாம்.

அயோத்திக்கு வாகனங்கள் செல்ல தடை - தீர்ப்பு வெளியாகும் நிலையில் நடவடிக்கை

Published On 2019-11-09 00:50 GMT   |   Update On 2019-11-09 00:50 GMT
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அயோத்திக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்துக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அயோத்தி:

அயோத்தியில், ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை இன்று (சனிக்கிழமை) வழங்க உள்ளது.

இதையொட்டி, விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கிற விதத்தில் மத்திய அரசும், அயோத்தி அமைந்துள்ள உத்தரபிரதேச மாநில அரசும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பதற்றமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

சர்ச்சைக்குரிய இடத்துக்கு வாகனங்கள் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லக்கூடிய எல்லா சாலைகளிலும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அங்கு வசிக்கிற குடும்பங்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தலைமை ஏற்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யுமான அசுதோஷ் பாண்டே, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அங்கு மாநில ஆயுத படை போலீசாரும், அதிரடி படையினரும், பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினரும், குறிபார்த்து சுடும் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொடி அணிவகுப்புகள் நடத்துமாறு துணை ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தை கண்காணிக்க ஏதுவாக வானில் ஆளில்லா விமானம் போன்ற ‘ட்ரோன் கேமரா’க்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் திவாரி கூறும்போது, “ஒட்டுமொத்த அயோத்தி மாவட்டத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர் தங்குவதற்கு 200 பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் செயல்படுவதில் பாதிப்பு ஏற்படாத வகையில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பதற்றமான 1,600 இடங்களில் 16 ஆயிரம் சமூக சேவகர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்” எனவும் கூறினார்.

உத்தரபிரதேச மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பி.வி.ராமசாஸ்திரி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, அயோத்தியிலும், பதற்றமான பிற மாவட்டங்களிலும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

அயோத்தியிலும், லக்னோவிலும் 2 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியது நினைவுகூரத்தக்கது. இந்த ஹெலிகாப்டர்கள் நெருக்கடியின்போது பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News