செய்திகள்
பிரதமர் மோடி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ இருக்காது - பிரதமர் மோடி

Published On 2019-11-08 18:52 GMT   |   Update On 2019-11-08 18:52 GMT
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

இதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு நவ.9 முதல் நவ.11 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்நிலையில் நாளை வெளியாக உள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “அயோத்தி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு எந்த முடிவை அளித்தாலும் அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த முடிவு சமாதானத்தின் பெரிய பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்திற்கு நம் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News