செய்திகள்
உத்தவ் தாக்கரே

சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தேவை இல்லை - உத்தவ் தாக்கரே காட்டம்

Published On 2019-11-08 13:50 GMT   |   Update On 2019-11-08 13:50 GMT
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அமித் ஷா மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை என உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.
 
முதல் மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் இன்று ராஜினாமா செய்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைய முடியாமல் போனதற்கு சிவசேனாவின் மெத்தனப்போக்குத்தான் காரணாம் என்று அவர் தெரிவித்தார். தனது நெருங்கிய நண்பராக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நான் பலமுறை கைபேசியில் தொடர்பு கொண்டும் எனது அழைப்பை அவர் நிராகரித்து விட்டார் எனவும் அவர் கூறினார்.



இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அமைதி காத்துவந்த உத்தவ் தாக்கரே மும்பையில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சியில் சமமானப் பங்கு என்று அமித் ஷா முன்னிலையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில்
என்னை பொய் பேசுபவராக சித்தரிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அளித்த பேட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இனிப்பான வார்த்தைகளை பேசியே சிவசேனாவை அழித்து விட முயற்சி நடந்தது. அவர்கள் எங்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர்.

பேச்சுவார்த்தைக்கான கதவுகளை நாங்கள் எப்போதுமே மூடியதில்லை. அவர்கள்(பாஜக) எங்களிடம் பொய் பேசியதால் அவர்களுடன் மீண்டும் பேச நாங்கள் விரும்பவில்லை. கங்கையை தூய்மைப்படுத்தும்போது அவர்களின் மனங்கள் களங்கப்பட்டு விட்டன. தவறான ஆட்களுடன் கூட்டணி அமைத்ததை எண்ணி வேதனைப்படுகிறேன்.

என்றாவது ஒருநாள் மகாராஷ்டிராவின் முதல் மந்திரி பதவியில் சிவசேனா அமரும் என்று எனது தந்தை பால் தாக்கரேவுக்கு நான் சத்தியம் செய்து தந்திருக்கிறேன். அதை நிறைவேற்ற எனக்கு அமித் ஷா அல்லது தேவேந்திர பட்னாவிஸ் தயவு தேவை இல்லை.

பாஜகவை நாங்கள் எதிரியாக கருதியதில்லை. ஆனால், அவர்கள் தவறான தகவல்களை வெளியிட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
 
Tags:    

Similar News