செய்திகள்
சிவசேனா

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கோரி காவல் துறைக்கு சிவசேனா கடிதம்

Published On 2019-11-08 13:01 GMT   |   Update On 2019-11-08 13:01 GMT
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வான புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் துறைக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
  
முதல் மந்திரி பதவியை தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்து விட்டது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் இன்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வான புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் துறைக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக சிவசேனாவின் செயலாளர் மிலிந்த் நர்வேகர் மும்பை போலீஸ் கமிஷனருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை சந்தித்து விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். எனவே, புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News