செய்திகள்
டெல்லி சாகெட் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் 3-வது நாளாக போராட்டம்

Published On 2019-11-06 23:10 GMT   |   Update On 2019-11-06 23:10 GMT
டெல்லியில் தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி, கோர்ட்டுகளை புறக்கணித்து வக்கீல்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:

டெல்லியில் திஸ்ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த 2-ந்தேதி போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விசுவரூபம் எடுத்து வருகிறது.

சாகெட் கோர்ட்டுக்கு வெளியே சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரரை வக்கீல்கள் தாக்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் துரிதமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, போலீஸ்காரரை தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மிக அபூர்வ நிகழ்வாக டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) போலீசார் போராட்டம் நடத்தினர். 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டம், உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

இதன் இடையே 2-ந்தேதி நடந்த மோதலின்போது வக்கீல்கள்மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் நடத்தும் போராட்டம் நேற்று 3-வது நாளை எட்டியது.

டெல்லியில் உள்ள 6 மாவட்ட கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் பணிக்கு செல்லாமல் கோர்ட்டுகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்டியாலா மற்றும் சாகெட் மாவட்ட கோர்ட்டுகளின் முக்கிய நுழைவாயில்களை வக்கீல்கள் மூடியதுடன் யாரையும் அனுமதிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

ரோகிணி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் ஒரு வக்கீல் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததாலும், மற்றொரு வக்கீல் கோர்ட்டு கட்டிடத்தின் உச்சிக்கு சென்று போராடியதாலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்தியது சட்டவிரோத போராட்டம்; அதில் பங்கேற்றவர்களை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷனருக்கு வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தெரிய வந்துள்ளது. வக்கீல்கள் மீது தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதவரையில், கோர்ட்டுகளுக்கு திரும்ப மாட்டோம் என்று இன்னொரு வக்கீல் கூறினார். டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ஜெய்வீர்சிங் சவுகான், “கோர்ட்டு வளாகத்துக்குள் மக்களை அனுமதிக்கிறோம். நாங்கள் அமைதியான முறையில் போராடுகிறோம்” என கூறினார்.

இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஷ்ரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “போலீசார் நடத்திய போராட்டம், அரசியல் நோக்கம் கொண்டதாகும்; சுதந்திர கால இந்திய வரலாற்றில் இந்த நாள், மிகவும் மோசமான நாள். ஒரு வாரத்திற்குள் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும்” என்று கூறி உள்ளார்.

மேலும், “போராட்டத்தை கைவிட வேண்டும் என்று டெல்லி வக்கீல் சங்கத்தை கேட்டுக்கொண்டோம். ஆனால் டெல்லி போலீசாரின் நடத்தையைப் பார்க்கிறபோது, இந்த விவகாரத்தில் இறுக்கமாக நாங்கள் உட்கார்ந்து விட முடியாது. பணிக்கு செல்லாமல் போராடிய போலீசார் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். வக்கீல்களை அடித்து நொறுக்கி கொல்வோம் என பகிரங்கமாக மிரட்டினர். எங்கள் கோரிக்கை, குற்றம் செய்த போலீஸ் அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட வேண்டும். தவறினால், நாங்கள் அமைதியான முறையில் தர்ணாவில் ஈடுபடுவோம்” என கூறி உள்ளார்.

6 மாவட்ட கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் போராட்டம் காரணமாக பணிகள் பாதித்தன.

சுப்ரீம் கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஷ்ரா, “வக்கீல்கள், போலீசார், பொதுமக்கள் என யார் வன்முறையில் ஈடுபட்டாலும் சகித்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். இதற்கிடையே டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

வக்கீல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என பிறப்பித்த உத்தரவின்மீது விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வக்கீல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, அவர்களை கைது செய்யவும் தடையாக அமையுமா, தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களிலும் இந்த உத்தரவு பொருந்துமா என அந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.என்.படேல் அமர்வு விசாரித்தது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறிய அம்சங்கள் சுய விளக்கம் என்பதால் அதற்கு விளக்கம் அளிக்க தேவையில்லை என கூறி மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News