செய்திகள்
பிரதமர் மோடி

சந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் - கொல்கத்தா சர்வதேச அறிவியல் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2019-11-06 01:09 GMT   |   Update On 2019-11-06 01:09 GMT
சந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் என்று கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச அறிவியல் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கொல்கத்தா:

 இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், விஞ்ஞான பாரதி அமைப்பும் இணைந்து நடத்தும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது.

4 நாட்கள் நடைபெறும் இந்த அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-2 திட்டத்துக்காக நமது விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தார்கள். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும் திட்டம் வெற்றி பெற்றது. நீங்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்தியாவின் அறிவியல் சாதனைகளின் பட்டியலில் இது பெரிய உயரத்தை அடைந்திருப்பதை காணமுடியும்.



அறிவியல் ஆராய்ச்சிகள் நூடுல்ஸ் தயாரிப்பது போலவோ, உடனடி பீட்சா வாங்குவது போலவோ இல்லை. அதற்கு மிகவும் பொறுமை அவசியம். இதுபோன்ற ஆராய்ச்சிகளின் பலன் மக்களுக்கு ஒரு நீண்டகால தீர்வை அளிப்பதாக இருக்கும். இந்த திட்டம் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அறிவியலில் தோல்வி என்பது இல்லை.

இதில் முயற்சிகள், பரிசோதனைகள் மற்றும் வெற்றிகள் அடக்கம். இதனை நீங்கள் மனதில் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அறிவியலிலோ அல்லது உங்கள் வாழ்க்கையிலோ சந்திக்கும் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியாது. தேவைகள் தான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால் இப்போது கண்டு பிடிப்புகள் தேவைகளின் எல்லைகளை கடந்து உள்ளது.

விஞ்ஞானிகள் சர்வதேச விதிகளையும், தரத்தையும் கருத்தில் கொண்டு நீண்டகால பலன்களை அளிக்கும், தீர்வு அளிக்கும் வகையிலான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் ஆசுதோஷ் சர்மா, பூட்டான் கல்வி மந்திரி ஜெய்பீர் ராய், மாலத்தீவு அறிவியல் மந்திரி மாலிக் ஜமால், மியான்மர் கல்வி மந்திரி கின்மவுங் ஆய், கொரிய தூதரக அதிகாரி ஜோய் ஜான் ஹோ, இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் லவ்ஹித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த அறிவியல் திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்து 260 பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தமிழக மாணவர்கள் இன்று (புதன் கிழமை) நடைபெறும் அறிவியல் கிராமம் என்ற நிகழ்ச்சியில் தங்களுடைய கிராமத்திற்கு என்ன தேவை? என்பதை ஓவியமாக வரைந்து சமர்ப்பிக்க உள்ளனர். இவை அந்தந்த தொகுதி எம்.பி.க்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து புவிசார் குடியீடு பெற்ற ஊட்டி மலைப்பூண்டு, திண்டுக்கல் பூட்டு உள்ளிட்டவைகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
Tags:    

Similar News