செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர தலைமை செயலாளர் அதிரடி நீக்கம்- ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

Published On 2019-11-05 10:03 GMT   |   Update On 2019-11-05 10:03 GMT
ஆந்திர தலைமை செயலாளர் பதவியில் இருந்த எல்.வி.சுப்பிரமணியம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். மனிதவள வளர்ச்சி கழகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:

ஆந்திர மாநில அரசின் தலைமை செயலாளராக எல்.வி.சுப்பிரமணியம் பணியாற்றி வந்தார்.

1983-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரை கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஆந்திர தலைமை செயலாளராக தேர்தல் கமி‌ஷன் நியமித்தது. தேர்தலுக்கு பிறகு புதிதாக அமைத்த ஜெகன்மோகன் ரெட்டி அரசு எல்.வி.சுப்பிரமணியத்தை தலைமை செயலாளராக வைத்து கொண்டது.

இந்த நிலையில் தலைமை செயலாளர் பதவியில் இருந்த எல்.வி.சுப்பிரமணியம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். மனிதவள வளர்ச்சி கழகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு எல்.வி.சுப்பிரமணியன் முதன்மை செயலாளர் பீரவீன் பிரகாஷூக்கு அரசின் தொழில் வீதிகளை மீறியதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தகவல் தெரிவிக்காமல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் எல்.வி.சுப்பிரமணியம் மெத்தனமாக இருந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஜெகன்மோகன் ரெட்டி பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தாமலும், அலுவலக அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்தார் என்றும் கூறப்படுகிறது.

இயைடுத்து அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஒரு மாநிலத்தின் உயர் பதவியான தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி மாற்றப்பட்டு முக்கியத்துவம் இல்லாத்துறைக்கு மாற்றப்பட்டு இருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சரிதானா என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் தனது கட்சி எம்.எல்.ஏ. மீது பெண் அதிகாரி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிக்கு நேரடியாகவே உத்தரவிட்டார். அப்போது யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறி இருந்தார். இதற்கிடையே தலைமை செயலாளரை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

இதையடுத்து தலைமை செயலாளர் பதவியை கூடுதல் பொறுப்பாக நில நிர்வாக தலைமை கமி‌ஷனர் நீரப்குமாரி பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News