செய்திகள்
எடியூரப்பா

எடியூரப்பா பேச்சு ஆடியோவை வெளியிட்ட கருப்பு ஆடு யார்? - பாஜக விசாரணை

Published On 2019-11-04 08:51 GMT   |   Update On 2019-11-04 08:51 GMT
உள்கட்சி ரகசிய கூட்டத்தில் எடியூரப்பா பேசியது தொடர்பான ஆடியோவை வெளியிட்டவர் யார்? என்பது குறித்து பாரதிய ஜனதா விசாரணை நடத்தி வருகிறது.
பெங்களூரு:

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் எடியூரப்பா காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 17 பேரை தன்பக்கம் இழுத்து பாரதிய ஜனதா ஆட்சியை அமைத்தார்.

இதில் கட்சி தாவிய 15 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டதையடுத்து அங்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பதவி பறிக்கப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்களுக்கும் பாரதிய ஜனதா சார்பில் டிக்கெட் வழங்க எடியூரப்பா முயற்சித்து வருகிறார்.

ஆனால் பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர்களை சமாதானப்படுத்த கடந்த 27-ந்தேதி ஹூப்பள்ளியில் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். இது உள்கட்சி ரகசிய கூட்டம் என்பதால் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அப்போது பேசிய எடியூரப்பா நாங்கள் தான் 17 எம்.எல்.ஏ.க்களை இழுத்து குமாரசாமி ஆட்சியை கவிழ்த்தோம். இதற்கு கட்சி தலைவர் அமித்ஷா தேவையான ஏற்பாடுகளை செய்தார் என்று குறிப்பிட்டார்.

இந்த பேச்சு ஆடியோ எப்படியோ காங்கிரஸ் கட்சியினர் கைக்கு சென்றது. அதை வெளியிட்ட அவர்கள் இந்த ஆடியோவை கவர்னரிடம் வழங்கி கட்சி அரசியல் சாசன சட்டத்தை மீறியதற்காக எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவின் உள்துறை மந்திரி பதவியை பறிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

பாரதிய ஜனதா ரகசியமாக நடத்திய கூட்டத்தில் யார் ஆடியோ எடுத்தது, அது எப்படி காங்கிரஸ் கட்சியினர் கைக்கு சென்றது என்பது தெரியவில்லை. இது பாரதிய ஜனதா கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களே யாரோ இதை பதிவு செய்து காங்கிரஸ் கட்சியினருக்கு வழங்க இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். எனவே அந்த கருப்பு ஆடு யார் என்பதை கண்டுபிடிக்க கட்சி மட்டத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருவேளை காங்கிரஸ்காரர்களே வேறு ஏதோ ஒரு ரகசிய வழியில் ஆடியோ பதியை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே இது எப்படி வெளியானது என்று முழுமையாக கண்டறிய வேண்டும் என்று பாரதிய ஜனதா விரும்புகிறது.

இதுசம்பந்தமாக மாநில பாரதிய ஜனதா தலைவர் நலின்குமார் கதேல் கூறும்போது, எங்கள் கட்சிக்காரர்கள் தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். ஆனாலும் இதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. எனவே எப்படி ஆடியோ வெளியேறியது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். விரைவில் உண்மையை கண்டுபிடிப்போம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, இந்த கூட்டத்தில் எடியூரப்பா தவறாக எதுவும் பேசிவிடவில்லை. சில வி‌ஷயங்களை கட்சியினர் மத்தியில் பேசினார். இதை காங்கிரஸ்காரர்கள் திரித்து கூறுகிறார்கள்.

ஏற்கனவே எடியூரப்பாவும், அனந்த்குமாரும் ஆட்சி மாற்றம் குறித்து பேசிய ஆடியோவை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இவர்களுக்கு இதுதான் வேலை. சித்தராமையாவுக்கும் மற்றவர்களுக்கும் சிறிது காலம் கூட பதவியில் இல்லாமல் இருக்க முடியவில்லை. எனவே ஏதாவது தந்திரங்களை கையாண்டு மீண்டும் பதவிக்கு வந்துவிட முடியுமா? என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற முயற்சியால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று கூறினார்.

முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவேகவுடா கூறும்போது, பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து நெறிமுறைகளை மீறி இதுபோல் எதிர்க்கட்சியினரை இழுத்து ஆட்சி அமைக்கிறார்கள்.

அவர்கள் செய்த தவறு என்ன என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. பாரதிய ஜனதா எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பாரதிய ஜனதாவின் மத்திய தலைவர் எப்படிப்பட்டவர் என்பதையும் இந்த ஆடியோ வெளிக்காட்டுகிறது. காங்கிரஸ் தரப்பில் இது சம்பந்தமாக கவர்னரிடம் இப்போது புகார் கூறி இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக ஜனாதிபதியிடமும் புகார் தெரிவிப்பதுடன், சுப்ரீம் கோர்ட்டையும் அணுக உள்ளனர் என்று கூறினார்.

Tags:    

Similar News