செய்திகள்
எடியூரப்பா

சித்தராமையா என்னை ராஜினாமா செய்ய கூறுவது முட்டாள்தனம்: எடியூரப்பா

Published On 2019-11-04 02:33 GMT   |   Update On 2019-11-04 02:33 GMT
ஆடியோவில் எனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டது, சித்தராமையா என்னை ராஜினாமா செய்ய கூறுவது முட்டாள்தனம் என்று எடியூரப்பா ஆவேசமாக கூறினார்.
பெங்களூரு :

உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது, “தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தேசிய தலைவர் தான் மும்பையில் தங்க வைத்திருந்தார். அவர்களின் தியாகத்தால் தான் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இதை யாரும் மறக்கக்கூடாது. அதனால் இடைத்தேர்தலில் அவர்களுக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது“ என்று கூறினார்.

எடியூரப்பாவின் இந்த பேச்சு அடங்கிய ஆடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு விளம்பர பைத்தியம் பிடித்துவிட்டது. தினமும் என்னை பற்றி பேசி அதன் மூலம் விளம்பரம் தேடுகிறார். எங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நான் பேசியதை அவர் திரித்து கூறுகிறார். வக்கீலாக பணியாற்றிய சித்தராமையாவுக்கு பொது அறிவு இல்லை.

உப்பள்ளியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சு குறித்து சித்தராமையா குற்றம்சாட்டுகிறார். நானும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா கூறுவது முட்டாள்தனம், பைத்தியத்தின் உச்சம். சித்தராமையா கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த மதிப்பும் கிடையாது. காங்கிரசாரே அவரது பேச்சை ஏற்பது இல்லை. மதிப்பதும் இல்லை.



காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தங்கியிருந்தனர். இது நாட்டுக்கே தெரிந்த விஷயம். நான் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அதைப்பற்றி கூறினேன். நான் பேசிய பேச்சை திரித்துவிட்டனர். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்தை திசை திருப்ப சித்தராமையா முயற்சி செய்கிறார்.

காங்கிரசில், தான் ஒரு பெரிய தலைவர் என்று சித்தராமையா நினைத்து கொண்டிருக்கிறார். இடைத்தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு நாங்கள் இடைத்தேர்தலில் டிக்கெட் கொடுக்கிறோம் என்று எங்கும் சொல்லவில்லை. சொந்த காரணத்திற்காக அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. நேரம் வரும்போது பா.ஜனதா மேலிடம், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தகுந்த முடிவு எடுக்கும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த பேட்டியின்போது, மக்கள் காங்கிரசுக்கு எதிராக பொங்கி எழுந்து விமர்சிக்கிறார்கள் என்பதற்கு பதிலாக அரசை விமர்சிக்கிறார்கள் என்று வாய் தவறி கூறிய எடியூரப்பா பிறகு சுதாரித்துக் கொண்டு தவறை திருத்திக்கொண்டார்.
Tags:    

Similar News