செய்திகள்
கெஜ்ரிவால்

வழக்கறிஞர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது - கெஜ்ரிவால்

Published On 2019-11-03 14:33 GMT   |   Update On 2019-11-03 15:37 GMT
டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நேற்று வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது போலீசார் குற்றவாளிகளை ஏற்றிவந்த சிறை வாகனத்தின் மீது ஒரு வக்கீலின் கார் மோதியதால் அந்த வக்கீலுக்கும் போலீசாருக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
 
இதையடுத்து, அந்த வக்கீலை லாக்-அப்புக்கு அழைத்து சென்ற போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை விடுவிக்க 8 நீதிபதிகள் சென்றனர். ஆனால், போலீசார் விடுவிக்க மறுத்து விட்டனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் தெரிவித்தாலும் இதை போலீசார் மறுத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்ற வாயிலில் வக்கீல்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அராஜகத்தை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கலவரத் தடுப்பு வாகனங்கள் உள்பட ஏராளமான போலீஸ் வாகனங்கள் அங்கு வந்து சேர்ந்தபோது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் பெரிய அளவில் மோதல் வெடித்தது. அப்போது ஒரு போலீஸ் வாகனம் மற்றும் ஒரு கார் தீயிட்டு எரிக்கப்பட்டது.

மேலும் சில போலீஸ் வாகனங்கள் கல்வீச்சு சம்பவத்தில் சேதமடைந்தன. அந்த பகுதி முழுவதும் சில நிமிடங்களுக்கு போர்க்களம் போல் காட்சியளித்தது. போலீசாரின் தாக்குதலில் காயமடைந்த இரு வக்கீல்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லிக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் நாளை போராட்டம் நடத்தப்படும் என டிஸ் ஹஸாரி வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி செயிண்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர்களை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை சந்தித்தார். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் எதிர்பாராதது. வழக்கறிஞர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது. அதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்  2 வழக்கறிஞர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களுக்கான மருத்துவ செலவை டெல்லி அரசு ஏற்கும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News