செய்திகள்
எடியூரப்பா

புதிய ஆடியோ விவகாரம்- எடியூரப்பாவுக்கு நெருக்கடி

Published On 2019-11-03 09:10 GMT   |   Update On 2019-11-03 12:24 GMT
முதல்- மந்திரி எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது யாருக்கும் மெஜா ரிட்டி கிடைக்கவில்லை.

மொத்தம் உள்ள 224 இடங்களில் பாரதிய ஜனதா 104 இடங்களிலும், ஆளுங் கட்சியான காங்கிரஸ் 80 இடங்களிலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை அடுத்து எடியூரப்பா முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

இதன்பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.

அந்த ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா பல முறை முயற்சித்தார். இறுதியாக அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. காங்கிரஸ்- ஜனதாதளம் கட்சியில் இருந்து 17 எம்.எல்.ஏ.க்களை பாரதிய ஜனதா பக்கம் இழுத்ததால் குமாரசாமி ஆட்சி மெஜாரிட்டியை இழந்து கவிழ்ந்தது.

அதே நேரத்தில் கட்சி தாவல் சட்டப்படி 15 எம்.எல்.ஏ.க்கள் பதவியை சபாநாயகர் ரமேஷ்குமார் பறித்தார்.அதை தொடர்ந்து எடியூரப்பா புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.


இந்த நிலையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அதற்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

பதவியை இழந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைய உதவிய 15 பேருக்கும் மீண்டும் டிக்கெட் கொடுக்க எடியூரப்பா முயற்சித்து வருகிறார். ஆனால், அதே தொகுதியில் செல்வாக்கு பெற்றுள்ள பாரதிய ஜனதா பிரமுகர்கள் தங்களுக்கு தான் சீட்டு வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறார்கள்.

அவர்களை சமாதானப் படுத்துவதற்கு எடியூரப்பா முயற்சித்து வருகிறார்.

கடந்த 27-ந்தேதி அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஹூப்பள்ளியில் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தை எடியூரப்பா கூட்டினார்.

அந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

பதவி இழந்துள்ள 15 எம்.எல்.ஏ.க்களும் நமது ஆட்சி அமைவதற்காக தியாகம் செய்துள்ளார்கள். எனவே, அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தியாகம் செய்த அவர்களுக்கு நாம் மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை என்றால் நான் குற்றம் செய்தவன் ஆகி விடுவேன். அதற்கு ஆளாக விரும்பவில்லை.

எனது முயற்சியாலும், பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வழி காட்டுதலாலும்தான் இந்த 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 17 பேரும் ராஜினாமா செய்தார்கள்.

மும்பை ரிசார்ட்டில் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா பிரமுகர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த பேச்சு வீடியோ திடீரென வெளியானது. சமூகவலைதளத்திலும் வெளி வந்தது. அதில், எடியூரப்பா கூட்டம் நடத்திய மண்டபத்தின் சில காட்சிகள் மட்டும் தெரிந்தன. ஆனால், எடியூரப்பாவின் முகம் தெரியவில்லை. அவர் பேசிய ஆடியோ மட்டும் தெளிவாக கேட்டது.

ஏற்கனவே பாரதிய ஜனதாதான் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்தது என்று காங்கிரசும், ஜனதா தளமும் குற்றம் சாட்டிய போது, எடியூரப்பா அதை மறுத்தார்.

ஆட்சி கவிழ்ப்புக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. 17 எம்.எல்.ஏ.க்களும் தானாக முன்வந்து ராஜினாமா செய்தார்கள் என்று கூறி வந்தார்.


ஆனால், இந்த கூட்டத்தில் பேசிய எடியூரப்பா ஆட்சி கவிழ்ப்புக்கு பாரதிய ஜனதாதான் காரணம் என்பதை தெளிவாக கூறி இருப்பதுடன் இதன் பின்னணியில் தானும், அமித்ஷாவும் இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்ததாக எடியூரப்பாவே ஒத்துக்கொண்டுள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவையும் மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது.

இது சம்பந்தமாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் ஆகியோர் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், எடியூரப்பா அரசை கலைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் சித்தராமையா கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா பேசியுள்ள காணொலிக் காட்சி குறித்து கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் மனு அளித்து உள்ளோம்.

கட்சியின் கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசிய பேச்சு அடங்கிய காணொலிக் காட்சி தொலைக்காட்சி, ஊடகங்கள் வாயிலாக நாடு முழுவதும் ஒளிபரப்பாகி உள்ளது.

கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா தேசியத் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவின் வழிகாட்டுதலின்பேரில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு எதிராக செயல்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அழைத்து 2 மாதங்கள் தங்க வைத்து இருந்ததாக கூறி இருக்கிறார்.

இதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க கட்சி தாவுவதற்கு மத்திய உள்துறை மந்திரியாக இருக்கும் அமித்ஷா தூண்டினார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதன் மூலம் இந்திய அரசியல மைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ள கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டு உள்ளது.

மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானதாகும்.

முதல்- மந்திரி எடியூரப்பாவும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி உள்ளனர். இது ஜனநாயகத்துக்கு கேடு விளைவிப்பதாகும். இந்த வி‌ஷயங்களை கவர்னர் வஜுபாய் வாலாவிடம் விளக்கி உள்ளோம்.

அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு கவர்னரை கேட்டுக் கொண்டோம்.

அதேபோல, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் பதவி நீக்கம் செய்யக் கோரி கவர்னர் வழியாக ஜனாதிபதிக்கு மனு அளித்து உள்ளோம். எங்கள் மனு மீது கவர்னர் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆடியோ விவகாரத்தால் எடியூரப்பாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியை நான்தான் கவிழ்த்தேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்தது போல் அவருடைய பேச்சு உள்ளது.

சட்ட ரீதியாக இதில் அவர் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது. மாநில பாரதிய ஜனதாவுக்கு மட்டும் அல்லாமல் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும் இதனால் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

எடியூரப்பா இது சம்பந்தமாக கூறும் போது, நான் அவ்வாறு பேசவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறி இருக்கிறார்.

ஆனாலும், ஆடியோவில் அவரது பேச்சு தெளிவாக இருப்பதால் இதில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியிலும் பல தலைவர்களும், மந்திரிகளும் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தற்போதைய துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கடந்த சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் குமட்ட ஹள்ளியிடம் 3 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும், அவருக்கு துணை முதல்- மந்திரி பதவி வழங்கப்பட்டது.

அதே மகேஷ் குமட்ட ஹள்ளி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில்தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது அவருக்கு மீண்டும் டிக்கெட் பெற்றுத்தர எடியூரப்பா முயற்சித்து வருகிறார். ஆனால், லட்சுமண் சவதி தனக்குத்தான் டிக்கெட் வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். அவர் எடியூரப்பாவுக்கு எதிராக காயை நகர்த்தி வருகிறார்.

இதே போல் மற்ற 14 தொகுதிகளிலும் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மற்றும் கட்சியில் பிரபலமாக உள்ளவர்கள் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். அவர்களும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்கக்கூடாது என்று வற்புறுத்துவதுடன் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் எடியூரப்பாவுக்கு எதிராக திரண்டு இருக்கிறார்கள். சில மந்திரிகளும், பல பா.ஜ.க. தலைவர்களும் எடியூரப்பாவின செயல்பாடு பிடிக்காமல் அதிருப்தியில் உள்ளார்கள்.

அவர்களும் எடியூரப்பாவுக்கு எதிரான அணியில் திரண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கட்சி மேலிடத்திலும் எடியூரப்பாவை பற்றி குறை கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாரதிய ஜனதாவில் அரசு ரீதியான பதவிகள் வழங்குவதுஇல்லை என்ற கொள்கை கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், இந்த விதியை மீறி 76 வயதான எடியூரப்பாவுக்கு முதல்- மந்திரி பதவி வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் எடியூரப்பா திட்டமிட்டபடி மந்திரி சபை அமைக்க கட்சி மேலிடம் அனுமதிக்க வில்லை. எடியூரப்பா எதிர்ப்பையும் மீறி அவருக்கு எதிரான நபர்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் மந்திரி பதவிகள் மேலிடத்தால் வழங்கப்பட்டன. மாநில தலைவரைக்கூட எடியூரப்பா எண்ணத்தை மீறித்தான் நியமித்தனர்.

மேலும் எடியூரப்பாவை தன்னிச்சையாக செயல்படவிடாமல் அதன் கடிவாளத்தை மேலிடம் தனது கைக்குள் வைத்துள்ளது.

இதனால் ஏற்கனவே நெருக்கடிக்கு ஆளாகி இருந்த எடியூரப்பா தனக்காக ராஜினாமா செய்த 15 பேருக்கு டிக்கெட் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் தவிக்கிறார்.

அதோடு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அதையும் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார். இந்த நிலையில் ஆடியோ விவகாரம் அவருக்கு இன்னொரு சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

இப்போது கவர்னரிடம் மனு கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி அடுத்தகட்டமாக கோர்ட்டில் வழக்கு தொடர தயாராகி வருகிறது.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இது பற்றி கூறும் போது, எடியூரப்பா இதுவரை ஆட்சி கவிழ்ப்புக்கு தான் காரணம் இல்லை என்று கூறி வந்தார். இப்போது அவரே தனது வாயால் ஒத்துக் கொண்டுள்ளார். இது சம்பந்தமாக நாங்களும் வழக்கு தொடருவோம். விசாரணை கமி‌ஷன் எதுவும் கேட்கும் எண்ணம் இல்லை. விசாரணை கமி‌ஷனால் எந்த பலனும் இருக்காது என்று கூறினார்.

Tags:    

Similar News