செய்திகள்
ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களுடன் ஏஞ்சலா மெர்கெல்

டெல்லியில் ஆட்டோ டிரைவர்களுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு

Published On 2019-11-02 08:33 GMT   |   Update On 2019-11-02 08:33 GMT
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இன்று டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இன்று டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை சந்தித்து பேசினார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் அரசுமுறை பயணமாக அந்நாட்டின் 12 துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவினருடன் டெல்லி வந்துள்ளார்.
 
டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை ஏஞ்சலா மெர்கெலுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், ராஜ்கட் பகுதிக்கு சென்ற ஏஞ்சலா மெர்கெல் அங்குள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, அதிகாரிகள் குழுவுடன் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு சென்ற ஏஞ்சலா மெர்கலை பிரதமர் மோடி வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின்போது மோடி-ஏஞ்சலா மெர்கெல் முன்னிலையில் 5 கூட்டு பிரகடனங்களில் இந்தியாவும் ஜெர்மனியும் கையொப்பமிட்டன. விண்வெளித்துறை, உள்நாட்டு விமான போக்குவரத்து, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 புதிய ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.



நேற்று மாலை டெல்லியில் உள்ள பழமையான ஜாமியா மசூதியை ஏஞ்சலா மெர்கெல் பார்வையிட்டார். நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கு சென்றார். அவருக்கு பிரதமர் நினைவு பரிசுகளை வழங்கினார்.

இன்று காலை டெல்லியில் உள்ள துவாரகா செக்டார் 21 மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்ற  ஏஞ்சலா மெர்கெல் மெட்ரோ ரெயிலில் சிறிது நேரம் பயணம் செய்தார். பின்னர், துவாரகா செக்டார் 21 மெட்ரோ ரெயில் நிலையத்தின் வாசல் பகுதிக்கு சென்றார்.

அங்கு பயணிகளுக்காக காத்திருந்த பசுமை (பேட்டரியால் இயங்கும்) ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்துக்கு சென்ற ஏஞ்சலா மெர்கெல் டிரைவர்களுடன் கலந்துரையாடினார்.

வெளிநாட்டின் பிரதமர் ஒருவர் தங்களை தேடிவந்து பேசிய நிகழ்ச்சி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News