செய்திகள்
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

படேல் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாக ஆகியிருக்கும் - தர்மேந்திர பிரதான்

Published On 2019-11-01 23:21 GMT   |   Update On 2019-11-01 23:21 GMT
வல்லபாய் படேல் முதலாவது பிரதமராக இருந்திருந்தால் இந்தியா இப்போது வல்லரசாக ஆகியிருக்கும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்:

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ‘ஒற்றுமை தின ஓட்டம்’ நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் ஒற்றுமைக்கும், நவீன கட்டமைப்புக்கும் பெரும் பங்காற்றியவர். அதேபோல விவசாயம், கூட்டுறவு, பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளிலும் மகத்தான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

படேல் முதலாவது பிரதம மந்திரியாக இருந்திருந்தால் இந்தியா இப்போது அதிக சக்திபடைத்த நாடாக, வல்லரசாக ஆகியிருக்கும். நாட்டின் முதல் உள்துறை மந்திரியான படேலின் பங்களிப்புகளை இந்த நாடு ஏறக்குறைய மறந்துவிட்டது. அவரது வளர்ச்சிக்கான நடைமுறை தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.

நாட்டில் இருந்த 560 மாநிலங்களை இந்திய அரசுடன் இணைத்தவர் அவர். மோடி அரசு அவரது பிறந்த நாளை 2014-ம் ஆண்டில் இருந்து ஒற்றுமை தினமாக கொண்டாடி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் இந்தியா தனது வரலாற்று தவறை திருத்தியுள்ளது. அதற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் திறமையே காரணம். அதனால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பது சாத்தியமானது. 

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
Tags:    

Similar News