செய்திகள்
பாஜக மந்திரி சுதிர் முங்கந்திவார்

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா? - பாஜக மந்திரி சூசகம்

Published On 2019-11-01 11:04 GMT   |   Update On 2019-11-01 12:33 GMT
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்பதற்கு பாஜக மந்திரி சுதிர் முங்கந்திவார் சூசகமாக தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க.வுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

இதனால் கூட்டணி ஆட்சி உடனடியாக அமைந்து பா.ஜ.க. முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா கட்சி தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று திடீரென சந்தித்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில நிதி மந்திரியும் பாஜக தலைவருமான சுதிர் முங்கந்திவார் தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜ.க.வுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாமதமானது தீபாவளி பண்டிகையினால் ஏற்பட்டது. ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்.



மகாராஷ்டிரா மக்கள் எந்தவொரு கட்சிக்கும் அல்ல. அவர்கள் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணிக்கு  வாக்களித்து உள்ளனர். எங்கள் கூட்டணி ஃபெவிகோல் அல்லது அம்புஜா சிமெண்டை விட வலுவானது. அரசு அமைவதில்  இரண்டரை ஆண்டு முதல் மந்திரி பதவி என்ற சிவசேனாவின் கோரிக்கை  தடையாக உள்ளது.

மகாராஷ்டிராவில் வரும் 8-ம் தேதியுடன் பாஜக ஆட்சி முடிவடைகிறது. ஒரு புதிய அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அமைய வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி தலையிட வேண்டும்.

மாநில அளவில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து முட்டுக்கட்டை தீர்க்க ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். தேவைப்பட்டால், பா.ஜ.க.வின் மத்திய தலைமை தலையிடும். புதிய அரசாங்கத்தை அமைப்பதில் முட்டுக்கட்டை தீர்ப்பதில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கும் என தெரிவித்தார்.

இதற்கிடையே, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், மகாராஷ்டிரா மக்கள் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே அடுத்த முதல் மந்திரியாக வரவேண்டுமென விரும்புகின்றனர் என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News