செய்திகள்
புகை, மாசு சூழ்ந்த டெல்லி சாலை

டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம், காற்று மாசு - 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2019-11-01 09:22 GMT   |   Update On 2019-11-01 10:51 GMT
அரியானா, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ஏராளமான வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுவதால் புகை மூட்டத்தின் எதிரொலியாக காற்று மாசு அதிகரித்ததால் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகரித்ததால் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்ணுள்ள வாகன போக்குவரத்து முறை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் ஓரளவுக்கு மாசுப்பாடு குறைந்தாலும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சூழ்ந்த கரியமில வாயு கலந்த புகையினால் சிலநாட்களாக மீண்டும் காற்று மாசு அபாயகரமான உச்சக்கட்ட நிலையை எட்டியது.

அருகாமையில் உள்ள அரியானா, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நெல் மற்றும் கோதுமை பயிர்களின் அறுவடை முடிந்து ஏராளமான வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுகிறது.


இதனால் ஏற்படும் புகை மூட்டத்தின் எதிரொலியாக தற்போது டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த காற்று மாசினால் சிறார்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர்  5ம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News