செய்திகள்
சஞ்சய் ராவத்

பாஜக ஆதரவு இல்லாமல் எங்களால் ஆட்சியமைக்க முடியும்- தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் சிவசேனா

Published On 2019-11-01 05:26 GMT   |   Update On 2019-11-01 05:26 GMT
சிவசேனா நினைத்தால் மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராட்ஷடிர சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனாவுடன் சேர்ந்து மீண்டும் கூட்டணி அரசை அமைக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் சிவசேனாவின் நிபந்தனைகளால், புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. 

முதல்வர் பதவியை பாஜகவுக்கு முழுமையாக விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற நிலையில் உறுதியாக உள்ளது. ஆனால், முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்ள பாஜக தயக்கம் காட்டி வருவதால் குழப்பம் தொடர்கிறது. 

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் திவாகர் ரோட்டே ராஜ், ஆகியோர் ராஜ்பவனுக்கு தனித்தனியாக சென்று ஆளுநர்  பகத்சிங் கோஷ்யாரை சந்தித்தனர். அப்போது அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கலாம் என தெரிகிறது. 

இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் பதவியேற்பேன் என முதல்வர் பட்னாவிஸ் உறுதிபட கூறியுள்ளார்.

இதற்கிடையே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

இன்று அவர் கூறுகையில், “சிவசேனா நினைத்தால், மாநிலத்தில் நிலையான அரசை அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற முடியும். 50-50 என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். சிவசேனாவில் இருந்து முதல்வர் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News