செய்திகள்
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி

தகவல் உரிமை சட்டத்தை அழிக்க இறுதி தாக்குதல் - மத்திய அரசின் திருத்தங்களுக்கு சோனியா காந்தி கண்டனம்

Published On 2019-10-31 21:41 GMT   |   Update On 2019-10-31 21:41 GMT
தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழித்தொழிக்க இறுதி தாக்குதல் நடத்தப்படுவதாக மத்திய அரசு மீது சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசின் குறுக்கீடு மற்றும் அச்சுறுத்தல் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்காக, தகவல் ஆணையர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், மக்களுக்கு பதில் அளிக்காமல், தங்கள் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த சட்டம் இடையூறாக இருப்பதாக மோடி அரசு கருதுகிறது. அதனால்தான், மோடியின் முதலாவது ஆட்சியில், தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டன. தலைமை தகவல் ஆணையர் பணியிடமும் 10 மாதங்கள் காலியாக இருந்தது.

இப்போது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை மேலும் நீர்த்துப் போக செய்யும்வகையில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி, தகவல் ஆணையர்கள் பதவிக்காலம், 5 ஆண்டுக்கு பதிலாக 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனர்களுக்கு இணையாக இருந்த தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள், மத்திய அரசு நிர்ணயிக்கும்வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், அவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகளை மத்திய அரசு விரும்பும்போதெல்லாம் மாற்றி அமைக்கலாம். தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், மத்திய அரசின் விருப்புரிமை அடிப்படையிலேயே அமையும்.

இதனால், மத்திய அரசுக்கு எதிரான எந்த தகவலையும் வெளியிட தகவல் ஆணையர்கள் அஞ்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒருவேளை மத்திய அரசுக்கு எதிரான தகவலை வெளியிட்டால், அவர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள் அல்லது பணியில் நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்கு கீழ்ப்படியும் அதிகாரிகளை மட்டுமே தகவல் ஆணையர்களாக நியமிக்க மோடி அரசுக்கு அனுமதி அளிக்கும் நிலைமை உருவாகி உள்ளது. அதனால் அந்த ஆணையர்கள், அரசுக்கு சங்கடத்தை விளைவிக்கும் தகவலை வெளியிட மாட்டார்கள்.

இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழித்தொழிக்க நடத்தப்படும் இறுதி தாக்குதல். நமது ஜனநாயக அமைப்புகளை சின்னாபின்னமாக சிதைக்கும் இத்தகைய முயற்சிகளை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.

தேசநலனுக்கு எதிரான, சுயநலன் சார்ந்த மோடி அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து போராடுவோம்.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.
Tags:    

Similar News