செய்திகள்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

பாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சிவசேனா திடீர் அறிவிப்பு

Published On 2019-10-31 02:13 GMT   |   Update On 2019-10-31 02:13 GMT
மகாராஷ்டிராவின் நலன் கருதி பாரதீய ஜனதா கூட்டணியில் நீடிப்பது அவசியம் என்று சிவசேனா திடீரென அறிவித்துள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டு காலம் முதல்-மந்திரி பதவி மற்றும் மந்திரி சபையில் சரிபாதி வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்ததாலும், அதற்கு பா.ஜனதா உடன்படாததாலும் இரு கட்சிகள் இடையே மோதலும் ஏற்பட்டது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சி அமையும் என அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று சிவசேனா தனது பிடிவாதத்தில் இருந்து பின்வாங்கி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் நாங்கள் நீடிப்பது அவசியமானது. ஆனால் எங்களுக்கான மரியாதை முக்கியம். தனிப்பட்ட நபர்கள் முக்கியம் அல்ல. மாநில நலனே முக்கியம். இதனை மனதில் கொண்டு, அமைதியான முறையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது உள்ளது. ஆட்சி அமைப்பதில் தாமதம் செய்து வருவதால், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகி சென்று விடுவார்கள் என்று கூறப்படுவது தவறு.

இவ்வாறு அவர் பேசினார்.



இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், சஞ்சய் ராவத் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஆட்சியில் சமபங்கு கேட்பதில் சிவசேனா பிடிவாத போக்கு காட்டுகிறதா?

பதில்:- நீங்கள் தான் அப்படி கூறுகிறீர்கள். ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதை செயல்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

கேள்வி:- சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளாரே?.

பதில்:- அவரை வாழ்த்துவது கடமை. 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்றவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்.

கேள்வி:- சிவசேனாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் 13 மந்திரி பதவிகள் வழங்க பா.ஜனதா முன்வந்து இருப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:- கணக்கு புத்தகத்துடன் நாங்கள் அமர்ந்து இருக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News