செய்திகள்
டெப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்

தெலுங்கானாவில் ஊழியர்கள் போராட்டம்- 2 பெண் கண்டக்டர்கள் பலி

Published On 2019-10-29 05:47 GMT   |   Update On 2019-10-29 05:48 GMT
தெலுங்கானாவில் ஊழியர்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில், 2 பெண் கண்டக்டர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து பஸ் ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.

பணிமனைகள் முன்பு போராட்டம், மறியல் என தினமும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கண்டன கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டதால் சில ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சிலரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கண்டக்டர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கம்மம் மாவட்டம் கவிராஜீநகரை சேர்ந்தவர் நீரஜா. இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 


இதையறிந்த பஸ் ஊழியர்கள், போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் நீரஜா பணியாற்றிய சாதுபள்ளி பஸ் டெப்போவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது டெப்போவில் இருந்து பஸ்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

திடீரென டெப்போ அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ் ஊழியர்களை அப்புறப்படுத்தினர். சிலரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே நீரஜா உடலுடன் பஸ் ஊழியர்கள் கம்மம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல் சித்திபேட்டையை சேர்ந்த பெண் கண்டக்டர் லதா மகேஸ்வரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதுவரை 4 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டும் 8 பேர் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 25-வது நாளாக நீடிக்கிறது.

Tags:    

Similar News