செய்திகள்
டெப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்

தெலுங்கானா பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் நீடிப்பு- பெண் கண்டக்டர் தற்கொலை

Published On 2019-10-28 10:27 GMT   |   Update On 2019-10-28 10:27 GMT
தெலுங்கானா பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 24வது நாளாக நீடித்து வரும் நிலையில், பெண் கண்டக்டர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அரசு விதித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். 

எனினும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள், மாற்று நபர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தினமும் பணிமனை முன்பு போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

போராட்டத்தின் இடையே 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று ஒரு பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இறந்தவரின் பெயர் நீரஜா (வயது 37), என்பதும் அவர் கம்மம் மாவட்டம் சாத்துப்பள்ளி டெப்போவில் கண்டக்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

“தீபாவளியையொட்டி நீரஜா தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது போராட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து தனது வீட்டுக்கு வந்த நீரஜா தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீதான அரசின் அணுகுமுறையால் இந்த விபரீத முடிவை நீரஜா எடுத்திருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று 24வது நாளாக நீடிக்கிறது. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News