செய்திகள்
பிரதமர் மோடி

காஷ்மீரில் 98 சதவீத ஓட்டுப்பதிவு புதிய விடியலுக்கான தொடக்கம் - பிரதமர் மோடி பாராட்டு

Published On 2019-10-25 19:26 GMT   |   Update On 2019-10-25 19:26 GMT
காஷ்மீரில் 98 சதவீத ஓட்டுப்பதிவு புதிய விடியலுக்கான தொடக்கமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்தில் 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்ட பின்னர் வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இதனை காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை புறக்கணித்தன. இந்த தேர்தலில் 98.3 சதவீத ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக பா.ஜனதா 81 இடங்களில் வெற்றிபெற்றது. சுயேச்சைகள் கணிசமாக வெற்றிபெற்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-




ஜம்மு, காஷ்மீர், லே மற்றும் லடாக் பகுதியில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது என்பதை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். வன்முறை எதுவும் நடைபெறவில்லை. இது, மக்கள் ஜனநாயகத்தின் மீது நிகரில்லா நம்பிக்கை வைத்திருப்பதையும், கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துவைத்திருப்பதையும் காட்டுகிறது.

வரலாற்றில் இல்லாத அளவு 98 சதவீத ஓட்டுகள் எந்த வன்முறையோ, இடையூறோ இல்லாமல் பதிவாகி இருக்கிறது. காஷ்மீர் மக்கள் இப்படி மிகவும் மகிழ்ச்சியுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியிருப்பதன் மூலம் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை (370-வது சட்டப்பிரிவு ரத்து) எடுத்த இந்தியாவின் நாடாளுமன்றத்தை பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்.ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் ஆகிய அனைத்து பகுதிகளில் நடைபெற்ற வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பிராந்தியம் முழுவதும் இளமையான தலைவர்கள் உருவாகியிருப்பது புதிய விடியலுக்கான தொடக்கமாக உள்ளது. இது வருகிற காலங்களில் தேசத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்.

இளமையான, ஆற்றல் மிக்க பிரதிநிதிகள் காஷ்மீர் மக்களின் விதியை மாற்றி அமைப்பார்கள். இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவுகளுக்கு நன்றி. காஷ்மீர் தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்ததற்காக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் மீண்டும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Tags:    

Similar News