செய்திகள்
செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா

ஜனநாயக ஜனதா கட்சி துணையுடன் அரியானாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக - துணை முதல் மந்திரியாகிறார் துஷ்யந்த்

Published On 2019-10-25 16:55 GMT   |   Update On 2019-10-25 16:55 GMT
10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பா.ஜ.க. அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. துணை முதல் மந்திரியாக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார்.
சண்டிகர்:

அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.

காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றி உள்ளது. மேலும், தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றிஉள்ளது. இதற்கிடையே, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில், அரியானாவில் திடீர் திருப்பமாக 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பா.ஜ.க. அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. துணை முதல் மந்திரியாக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா இன்று சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தையில் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது எனவும் , அமைச்சர் பதவி தருவது, உள்ளூர் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் அளவிற்கு சவுதாலா கட்சி சொல்லும் பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, பா.ஜ.க தலைவர் அமித்ஷா இன்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை கவர்னரிடம் நாளை தெரிவிப்போம். மேலும் ஜே.ஜே.பி., கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்குவோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News