செய்திகள்
பஞ்சாயத்து தேர்தலில் வாக்களித்த மக்கள்

ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல்: அதிக இடங்களை கைப்பற்றிய சுயேட்சைகள்

Published On 2019-10-24 17:30 GMT   |   Update On 2019-10-25 03:12 GMT
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச அந்தஸ்து வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.  

இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலுக்கு மத்தியில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் இன்று நடைபெற்றது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் பஞ்சாயத்து தேர்தல் இதுவாகும். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் எதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 316 வட்டார வளர்ச்சி கவுன்சில்களில், 310 கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 1065 வேட்பாளர்கள் களம் இறங்கினர். ஆனால் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் புறக்கனித்தனர். 

ஆனால் பாஜக, ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மொத்தம் 93.65 சதவிகிதமும், ஜம்மு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் 99.4 சதவிகிதமும் வாக்குப்பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள 310 கவுன்சில்களில் 217 இடங்களில் சுயேட்சைகளும், 81 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளது. காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சி 8 இடங்களை பிடித்துள்ளது. தேர்தலை புறக்கணிக்கிறது என அறிவிப்பதற்கு முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு நபரும் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். 



 


Tags:    

Similar News