செய்திகள்
மாதிரிப்படம்

ஆவிகள், பேய்கள் உள்ளன என நிரூபித்தால் ரூ. 50,000 ரொக்கப்பரிசு - ஒடிசா கலெக்டர் அறிவிப்பு

Published On 2019-10-24 12:32 GMT   |   Update On 2019-10-24 12:32 GMT
ஆவிகள், பேய்கள் உள்ளது நிரூபிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு தரப்படும் என ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
புவனேஸ்வர்: 

வட மாநிலங்களில் ஆவிகள், பேய்கள், சூனியம் போன்றவற்றில் நம்பிக்கையுடையோர் அதிகம் காணப்படுகின்றனர். இம்மாதிரியான  மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் அனேக  புகார்கள் வந்த வண்ணம் உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் ஆவிகள், பேய்கள் உள்ளன என நிரூபிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என ஒடிசாவில் உள்ள கஞ்சாம்  மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- 

அநேக மக்கள் மாந்திரீகம், பில்லி சூனியம், ஆவிகள் போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர். வீட்டில் ஒருவருக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மருத்துவமனைக்கு செல்லாமல் உறவினர்கள் செய்வினை வைத்துள்ளதாக கருதி மந்திரவாதிகளிடம்  செல்கின்றனர். அவர்களும் மக்களிடம் பணம் பறிக்கின்றனர். 

இது மூடநம்பிக்கையாகும். என்னைக் கேட்டால் ஆவிகள், பேய்கள் என எதுவும் இல்லை. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் நாம் முதலில்  மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும். 

சமீபத்தில் மந்திரவாதிகள் அறிவுறையின் பேரில் 6 நபர்களுக்கு பற்களை பிடுங்கிய சம்பவம் தொடர்பாக கோபாபூரில் 35 பேரை  போலீசார் கைது செய்தனர். இம்மாதிரியான மூட நம்பிக்கைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்றாலும்,  இன்னும் பல கிராமங்களில் மந்திரவாதிகளை நம்பி மக்கள் ஏமாறுகின்றனர்.

இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மனிதநேய பகுத்தறிவு அமைப்பு என்ற அமைப்பு 'ஒடிசாவில் சூனிய தடுப்புச் சட்டத்தை' கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News