செய்திகள்
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி

சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி

Published On 2019-10-23 21:28 GMT   |   Update On 2019-10-23 21:28 GMT
2 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்தார். அதில், பிரியங்கா இடம்பெறவில்லை.
புதுடெல்லி:

மராட்டியம், அரியானா ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. அந்த மாநிலங்களில் ஆட்சி அமைப்பது யார் என்று இன்று தெரிந்து விடும்.

இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் பற்றியும், தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றியும் விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 17 பேர் கொண்ட குழுவை நேற்று அமைத்தார்.

சோனியா காந்தி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, கபில் சிபல், கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இளம் தலைவர்கள் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, ராஜீவ் சதாவ், சுஷ்மிதா தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா இடம்பெறவில்லை.

இந்த குழு, 25-ந் தேதி (நாளை) கூடுகிறது. கூட்டத்தில், சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை குறித்தும், அதை எப்படி அணுகுவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 18-ந் தேதி தொடங்குகிறது. அதில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் பற்றியும், மோடி அரசை நெருக்குதலுக்கு உள்ளாக்குவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

பொருளாதார மந்தநிலையை சீர்செய்வதில் மத்திய அரசின் தோல்வியை அம்பலப்படுத்த வியூகம் வகுக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை ஆகியவற்றை பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 
Tags:    

Similar News