செய்திகள்
கொச்சியில் ரெயில் நிலையத்தை சூழ்ந்து நின்ற மழை வெள்ளம்.

கேரளாவில் 4 மாவட்டங்களில் மீண்டும் அதிதீவிர மழைக்கு வாய்ப்பு

Published On 2019-10-23 05:08 GMT   |   Update On 2019-10-23 05:08 GMT
கேரளாவில் 4 மாவட்டங்களில் மீண்டும் அதிதீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்த சில நாட்களிலேயே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழையின்போதுதான் அதிக மழை பொழிவு இருக்கும். வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பொழிவு இருக்காது.

ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

எர்ணாகுளம் மாவட்டம் தான் வடகிழக்கு பருவமழையால் அதிக பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இங்கு கொட்டி தீர்த்த மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. கொச்சி ரெயில் நிலையத்திலும் மழை வெள்ளம் புகுந்ததால் ரெயில் போக்குவரத்து தடைபட்டது. பாலாரி வட்டத்தில் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. மாநிலம் முழுவதும் மழையால் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.


எர்ணாகுளத்தை போல மலையோர மாவட்டங்களான வயநாடு, மலப்புரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மலைகளில் இருந்து பாய்ந்தோடி வரும் காட்டாற்று வெள்ளத்தில் பாறைகள் இழுத்து வரப்படுகின்றன. இதனால் மலையோரங்களில் உள்ள வீடுகள் இடியும் நிலை ஏற்பட்டது.

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பத்தினம் திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்யுமென்றும், கோட்டயம், இடுக்கி, காசர்கோடு மாவட்டங்களில் நாளை மறுநாள் அதிதீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் 19 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2,580 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News