செய்திகள்
திரிபுரா கம்யூனிஸ்டு முன்னாள் மந்திரி பாதல் சவுத்ரி

ரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது

Published On 2019-10-22 10:18 GMT   |   Update On 2019-10-22 10:18 GMT
திரிபுரா பொதுப்பணித் துறையில் ரூ.630 கோடி ஊழல் செய்தது தொடர்பான வழக்கில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி கைது செய்யப்பட்டார்.
அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நீண்டகாலமாக இருந்து வந்தது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா அங்கு வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. புதிய அரசு நடத்திய விசாரணையில் கம்யூனிஸ்டு ஆட்சியில் சில முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு 2008-ல் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் பாதல் சவுத்ரி. அவர் ரூ.630 கோடி வரை ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முன்னாள் மந்திரி பாதல் சவுத்ரி, முன்னாள் தலைமை செயலாளர் யஷ்பால்சிங், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் சுனில் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு பாதல் சவுத்ரி செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால் அவர் தலைமறைவானார். போலீசாரின் அலட்சியத்தால் அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 9 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தலைமறைவான முன்னாள் மந்திரி பாதல் சவுத்ரி உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று முன்னாள் மந்திரி பாதல் சவுத்ரியை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மாணிக் தாஸ் கூறியதாவது:-

பாதல்சவுத்ரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்று அவரை கைது செய்தோம். உடல் நலம் சரியான பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனையில் உள்ள பாதல் சவுத்ரி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவரை முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், மாநில கம்யூனிஸ்டு செயலாளர் கவுதம் தாஸ் ஆகியோர் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தனர்.
Tags:    

Similar News