செய்திகள்
வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற அரியானா முதல்வர் கட்டார்

வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர்

Published On 2019-10-21 07:24 GMT   |   Update On 2019-10-21 07:24 GMT
அரியானாவில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுபோட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கர்னல்:

அரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், கர்னலில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட்டார். 

இதற்காக அவர் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சண்டிகரில் இருந்து இன்று காலை கர்னல் நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து வீட்டுக்கு இ-ரிக்சாவில் சென்றார். பின்னர் அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் முதல்வர் கட்டார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் ஓட்டுக்காக பொதுமக்களிடம் சென்றோம். அவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். நாங்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்” என்றார்.

“மாநிலம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஏற்கனவே களத்தில் இருந்து வெளியேறிவிட்டன. அவர்களின் பிரச்சாரங்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு இல்லை” என்றும் கட்டார் கூறினார். 



கர்னல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கட்டார். கடந்த தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்டார்,  இந்த முறை அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணியாற்றியிருக்கிறார். இந்த முறை அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் திரிலோச்சன் சிங் போட்டியிடுகிறார். இவர் அரியானா மாநில சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News