செய்திகள்
மனைவியுடன் வந்து வாக்களித்த மத்திய மந்திரி கட்காரி

மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்- காலையிலேயே ஓட்டு போட்ட தலைவர்கள்

Published On 2019-10-21 04:32 GMT   |   Update On 2019-10-21 04:32 GMT
மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும், அரியானாவில் உள்ள 90 தாகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 

மகாராஷ்டிரா தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகிறது. அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இதுதவிர  தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி உள்பட நாடு முழுவதிலும் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாரா பாராளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர்.

மத்திய மந்திரி நிதின் கட்காரி தனது மனைவியுடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நாக்பூரில் ஓட்டு போட்டார்.



தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் அவரது மனைவியுடன் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா தொகுதியில் ஓட்டு போட்டார். பாரமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ்  சார்பில் பாரமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவார், கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பாரமதி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். 

அரியானா மாநிலம் சார்கி தாத்ரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தனது குடும்பத்தினருடன் பலாலி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பரோடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் யோகேஸ்வர் தத், தனது வாக்கை காலையிலேயே பதிவு செய்தார்.
Tags:    

Similar News