செய்திகள்
பால்

பதப்படுத்தப்பட்ட பாலில் 38 சதவீதம் தரமற்றவை - ஆய்வில் தகவல்

Published On 2019-10-19 06:20 GMT   |   Update On 2019-10-19 06:20 GMT
இந்தியாவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 38 சதவீதம் தரமற்றது என தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலின் தரத்தை ஆய்வு செய்தது.

கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 1,103 நகரங்களில் இருந்து மொத்தம் 6,432 பால் மாதிரிகளை சேகரித்தது. மொத்த மாதிரியில் சுமார் 40.5 சதவீதம் பதப்படுத்தப்பட்ட பால், மீதமுள்ளவை மூலப்பொருள் ஆகும்.

ஆய்வு தகவல்களை வெளியிட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் கூறியதாவது:-

பாலில் கலப்படம் அதிகம் என்று சாதாரண மனிதர்கள் நம்புகின்றனர். ஆனால் கலப்படம் செய்வதைவிட மாசுபாடு ஒரு கடுமையான பிரச்சினையாக இருந்தது என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது.

பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளை சோதனை செய்தபோது அவற்றில் பூச்சிக்கொல்லி மருந்துகள், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் மருந்து, ‘அப்லாடாக்சின்- எம்1’ என்ற ரசாயன பொருள் உள்ளிட்டவை அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

‘அப்லாடாக்சின்- எம்1’ என்ற வேதிப்பொருள், மாட்டுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் வழியாக பாலில் வருகிறது. பதப்படுத்தப்பட்ட பாலின் தரத்தை உயர்த்துவதற்காக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையில் ஈடுபடும். நிறுவனங்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அவற்றின் தரத்தை ஆய்வு செய்த பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 38 சதவீதம் தரமற்றது என தெரியவந்துள்ளது. இவற்றில் 10.4 சதவீத பால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் பொருந்தவில்லை.

கொழுப்புகள், எஸ்.என்.எப்., மால்ட்டோ டெக்ஸ்ட்ரின் மற்றும் சர்க்கரை போன்ற அசுத்தங்கள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் உள்ளது. மூலப்பால் விசயத்தில் 3,825 மொத்த மாதிரிகளில் இணங்காதது 47சதவீதம் உயர்ந்த விகிதத்தில் இருந்தது.

தமிழகம், டெல்லி, கேரள மாநிலங்களில் பயன்படுத்தப்படும் பாலில்தான் ‘அப்லாடாக்சின்- எம்1’ ரசாயனம் அதிகம் உள்ளது. கால்நடைகள் சாப்பிடும் தீவனங்களில் செய்யப்பட்ட கலப்படம் காரணமாக அவற்றின் பால் தரமற்று போய் உள்ளன. பாலில் செய்யப்பட்ட கலப்படம் இதற்கு காரணமல்ல.



மொத்த பால் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 12 சதவீத மாதிரிகளில் மட்டுமே கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், கேரள மாநிலங்களில்தான் கலப்படம் அதிகம் உள்ளது.

தரமற்ற பால் விற்பனையை தடுப்பதற்கான விதிமுறைகளை பின்பற்றுவதற்கு அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 1-ந்தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் பாலில் தூய்மைக்கேடு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமற்ற பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எங்கள் ஆய்வு முடிவுகளை ஏற்க மறுத்து கோர்ட்டுக்கு செல்லக்கூடும். ஆனாலும் எப்.எஸ்.எஸ்.ஏ-.ஐ. நிர்ணயித்துள்ள தர விதிமுறைகளுக்கு அவை கட்டுப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88, டெல்லியில் இருந்து 262 மாதிரிகளில் 38, கேரளாவில் இருந்து 187 மாதிரிகளில் 37 மாதிரிகளில் கூடுதல் ரசாயன கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் உள்ள ‘அப்லாடாக்சின்- எம்1’ வேதிப்பொருள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. குறிப்பாக புற்றுநோயை உண்டாக்கும் பொருள் ஆகும்.

மொத்த பால் மாதிரிகளில் 1.2 சதவீதம் ஆண்டிபயாடிக் பொருட்களை கொண்டிருந்தன. இதில் மத்தியபிரதேசத்தில் 335 மாதிரிகளை ஆய்வு செய்ததில் 23, மகாராஷ்டிராவில் 678 மாதிரிகளில் 9, உத்தரபிரதேசத்தில் 729 மாதிரிகளில் 8 மாதிரிகள் அதிக அளவு வேதிப்பொருட்களை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோல மூலப்பொருளின் மாதிரியில் கேரளாவில்தான் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வணிக நிபுணர் குல்தீப் சர்மா கூறியதாவது:-

இந்த பிரச்சினையானது விவசாயிகள் சேமித்து வைக்கும் தீவனங்களோடு தொடர்புடையவை. சேமிக்கப்பட்ட தீவனங்களில் வளரும் சில வகையான அசுத்தங்களில் இயற்கையாகவே ‘அப்லாடாக்சின்- எம்1’ வேதிப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நல்ல சேமிப்பு நடைமுறைகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம். பாதுகாப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அவர்கள் உதவ வேண்டும் என்றார்.

Tags:    

Similar News