செய்திகள்
பசவராஜ் பொம்மை

பெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ - கர்நாடக மந்திரி பகீர் தகவல்

Published On 2019-10-18 12:06 GMT   |   Update On 2019-10-18 12:06 GMT
பெங்களூரு மற்றும் மைசூரு பகுதிகளில் மறைமுகமாக பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ இயங்கி வருவதாக கர்நாடக மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்பு 5 பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் எல்லையில் நூற்றுக்கணக்கில் பதுங்கியுள்ளனர். ஆனால் காஷ்மீர் எல்லையில் தீவிர கண்காணிப்பு இருப்பதால் அவர்களால் முன்பு போல ஊடுருவ இயலவில்லை.

இதனால் வேறு வழிகளில் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். தென் இந்திய கடல் வழியாக ஊடுருவ அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது இந்த முயற்சியை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்துள்ளது.

இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள கோரக்பூரில் 5 பயங்கரவாதிகள் நடமாடியதை கண்டு பிடித்துள்ளனர். அவர்களது செல்போன் உரையாடல்களை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இடைமறித்து கேட்டனர். அப்போது அவர்கள் இந்தியாவில் 2 முக்கிய நகரங்களுக்குள் ஊடுருவ இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிந்தது.

நாடு முழுவதும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்பு 5 பயங்கரவாதிகளும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இருந்து இந்தியாவின் பகுதிகளை இணைக்கும் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் கைவரிசை காட்டும் முன்பு அவர்களை வேட்டையாட பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு மற்றும் மைசூரு பகுதிகளில் மறைமுகமாக பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ இயங்கி வருவதாக கர்நாடக மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை இன்று தெரிவித்துள்ளார்.



’மைசூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பசவராஜ் பொம்மை, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் மாநிலத்தின் உள்பகுதிகளில் வங்காளதேச ஜமாத்துல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தேசிய புலனாய்வு முகமை எச்சரித்துள்ளது.

பெங்களூரு மற்றும் மைசூருவில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கலாம். எனவே, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசை தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்டுள்ளது.

இந்த பின்னணியில் பெங்களூரு மற்றும் மைசூருவில் காவல் துறையினர் பொது இடங்களில் சந்தேகத்துரிய நபர்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். புதிய நபர்களின் நடமாட்டம் தொடர்பான தகவல்களும் கண்காணிக்கப்படுகிறது’ எனவும் பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News