செய்திகள்
சிங்க கூண்டுக்குள் குதித்த வாலிபர்

டெல்லி உயிரியல் பூங்காவில் சிங்க கூண்டுக்குள் குதித்த வாலிபர்

Published On 2019-10-18 06:35 GMT   |   Update On 2019-10-18 06:35 GMT
டெல்லி உயிரியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த வாலிபரை பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
புதுடெல்லி:

டெல்லியில் பிரசித்தி பெற்ற வன உயிரியல் பூங்காவுக்கு நாள் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு இந்த பூங்காவில் வெள்ளைப்புலி இருந்த இடத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்ற வாலிபரை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் கூண்டை சுற்றி உயரமான வேலிகள் அமைக்கப்பட்டன.

நேற்று அங்கு பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் காத்திருந்தனர். அப்போது கருப்பு பனியன் அணிந்த வாலிபர் ஒருவர் பூங்காவுக்குள் ஓடினார். திடீரென அந்த வாலிபர் சிங்கம் அடைத்து வைக்கப்பட்டு இருந்த முள்கம்பி வேலியைத் தாண்டி கூண்டுக்குள் குதித்தார்.

அங்கிருந்து நடந்து சென்ற அவர் மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்து கொண்டார். சில நிமிடங்கள் சிங்கத்தை பார்த்துக்கொண்டே இருந்த அவரை சிங்கமும் பார்த்துக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்த பூங்கா காவலர்கள், சிங்கம் பராமரிப்பாளர்கள் அந்த இடத்துக்குள் நுழைய முயன்றனர். சிங்கத்தை அந்த வாலிபர் நெருங்கி வந்ததும் சிங்கத்திடம் கை கொடுக்க தனது கையை நீட்டினார். ஆனால் சிங்கம் அவரைப் பார்த்து சற்று பின்நோக்கி நகர்ந்தது.



இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. உடனே பூங்கா ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு சிங்கம் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து மாமிசத் துண்டுகளை வீசி சிங்கத்தின் கவனத்தை திசை திருப்பினர். மேலும் சிங்கத்தை நோக்கி மயக்க ஊசிகளை செலுத்தினர்.

இதில் சிங்கம் மயங்கியதும், மரத்தின் அருகே நின்ற வாலிபரை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் எந்த காயமும் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரேஹன்கான் (28) என்பது தெரிய வந்தது. அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News