செய்திகள்
சோனியா காந்தி

சோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்

Published On 2019-10-18 05:39 GMT   |   Update On 2019-10-18 05:39 GMT
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது அரியானா தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார்.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் மே 2-ந்தேதி ஒருநாள் மட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அவர் அந்த தொகுதிக்கு சென்று ஒரே ஒரு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு அவர் இதுவரை எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களை மட்டுமே சந்திக்கும் சோனியா வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ள அரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு மாநில காங்கிரஸ் தலைவர்களும் அவரை போட்டி போட்டு அழைத்தனர்.

ஆனால் சோனியா அரியானா மாநிலம் மகேந்திரகர் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்ய ஒத்துக்கொண்டார். இதையடுத்து மகேந்திரகர் நகரில் சோனியாவை வரவேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை சோனியாவின் பிரசார பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த தகவலை அரியானா மாநில மூத்த தலைவர் ஒருவர் உறுதி செய்தார்.



அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகேந்திரகர் நகரில் இன்று இரவு நடக்கும் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா பங்கேற்க இயலவில்லை. அவருக்கு பதில் ராகுல் பங்கேற்று பிரசாரம் செய்வார் என்று கூறியுள்ளார்.

சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவரது தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சோனியா பிரசாரம் ரத்து ஆனதால் அரியானா மாநில காங்கிரசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News