செய்திகள்
சரத்பவார்

காங்கிரஸ் பலவீனம் அடையவில்லை ஆக்ரோஷமாக செயல்படுகிறது: பாஜகவுக்கு சரத்பவார் பதிலடி

Published On 2019-10-18 03:05 GMT   |   Update On 2019-10-18 03:05 GMT
“காங்கிரஸ் பலவீனம் அடையவில்லை, ஆக்ரோஷமாக செயல்படுகிறது” என பா.ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு சரத்பவார் பதிலடி கொடுத்தார்.
மும்பை :

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரசாரத்தின் போது ஆளும் பா.ஜனதா தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தவிர வேறு எந்த பெரிய தலைவர்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை என கூறினர். மேலும் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்து விட்டதாக குற்றம்சாட்டினர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. மராட்டியத்தில் காங்கிரஸ் அடிமட்டத்தில் இருந்து நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆக்ரோஷமாக தேர்தல் பணி செய்ததை நான் பார்த்தேன். தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் கூட காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

பா.ஜனதாவுக்கு பெரிய தலைவர்களாக பிரதமர், உள்துறை மந்திரி போன்றவர்கள் உள்ளனர். காங்கிரஸ் தேசிய தலைவர்கள் அதுபோன்ற பொறுப்பில் இல்லை. மராட்டியத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை. தேசியவாத காங்கிரசை பொறுத்தவரை நான் உள்ளதால் இங்கு தேர்தல் களத்தில் உள்ளேன். அதற்காக காங்கிரஸ் பலவீனம் அடைந்து விட்டது என அர்த்தமில்லை. காங்கிரசுக்கு கீழ்மட்டத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் திரளான தொண்டர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.



இதேபோல காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணையும் என கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டேவின் கருத்து குறித்து கூறுகையில், "தனிநபராக சுஷில்குமார் ஷிண்டே சோர்வாக இருக்கலாம். ஆனால் நான் சோர்வாக இல்லை." என்றார்.

மேலும் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கியது மராட்டிய சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சரத்பவார் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, "மராட்டியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். தேசிய பிரச்சினையில் மக்கள் எப்போதும் ஒன்று சேர்வார்கள். 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இதை பார்த்து இருக்கிறோம். அதுபோல தான் புலவாமா சம்பவத்திற்கு பிறகு மக்கள் முழுமையாக பா.ஜனதாவை ஆதரித்தனர்.

அதனால் தான் மோடி பாராளுமன்ற தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது நடப்பது மாநில சட்டசபை தேர்தல். மக்கள் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் வெவ்வேறு விதமாக வாக்களிப்பார்கள். அதை நாம் கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள், சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதுபோன்ற ஒரு மாற்றம் மராட்டியத்திலும் வரும்.

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எனக்கும், பிரபுல் பட்டேலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் என்ன நடக்கப்போகிறது?. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சம்மனை அனுப்பி எங்களை சோர்வடைய வைக்க வேண்டும் என விரும்பினார்கள். தேர்தல் நேரங்களில் முன்பு இதுபோன்று யாரும் நடந்து கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News