செய்திகள்
சீனா கொடி

இந்திய எல்லையில் சீன படைகள் குவிப்பு

Published On 2019-10-16 05:34 GMT   |   Update On 2019-10-16 05:34 GMT
சீன ராணுவம் இந்திய எல்லையில் அதிக அளவில் ராணுவத்தை குவித்துள்ளது. அவர்கள் பல இடங்களில் போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியா- சீனா இடையே 3488 கி.மீட்டர் நீளத்துக்கு எல்லை பகுதி அமைந்துள்ளது.

இதில், இந்தியாவில் உள்ள சில பகுதிகளை சீனா தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி வருகிறது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சீன ராணுவம் அடிக்கடி இந்திய பகுதிக்குள் ஊடுருவி அத்து மீறலில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.

எல்லை பகுதிக்கு விரைவாக ராணுவத்தை அனுப்ப வசதியாக சீனா சாலை வசதி உள்ளிட்ட ஏராளமான கட்டுமானங்களை எல்லை பகுதியில் உருவாக்கி உள்ளது.

சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு வந்தார். மகாபலிபுரத்தில் அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் நட்புறவு பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனால் சீனா நட்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சீன ராணுவம் இந்திய எல்லையில் அதிக அளவில் ராணுவத்தை குவித்துள்ளது. அவர்கள் பல இடங்களில் போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பீரங்கி தாக்குதல், கையெறி குண்டுகளை வீசுதல் போன்ற பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்திய எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் நேரடியாக பார்க்கும் நிலையிலேயே மிக அருகில் இந்த போர் பயிற்சிகள் நடந்து வருகின்றன.

என்னதான் நட்பு பேச்சுவார்த்தை நடந்தாலும் எல்லை விவகாரத்தில் நாங்கள் சமரசமாக இல்லை என்பதை காட்டு வதற்காகவே இந்த படை குவிப்பு நடப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2017-18-ம் நிதி ஆண்டில் இந்திய எல்லையில் 400 போர் பயிற்சிகளை சீனா மேற்கொண்டது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை 450 பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இன்னும் தொடர்ந்து பயிற்சிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News