செய்திகள்
கைது

கேரளாவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தி கொலை - 3 பேர் கைது

Published On 2019-10-16 05:17 GMT   |   Update On 2019-10-16 05:17 GMT
கேரளாவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரளாவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(வயது 68). இவர் கைப்பமங்கலம் பகுதியில் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் இரவு 12 மணியளவில் தனது பெட்ரோல் பங்கில் வசூலாகும் பணத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த திங்கட்கிழமை பெட்ரோல் பங்க்கில் வசூலான பணத்தை எடுத்து கொண்டு தனது காரில் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வெகு நேரமாகியும் தந்தை வீட்டிற்கு வராததால் அவரது மகள் போன் செய்தார். அப்போது மர்மநபர் எடுத்து பேசினார். அதில் உங்கள் தந்தை தூங்கி கொண்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் மனோகரன் காலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனோகரனின் மகள் சம்பவம் குறித்து திருச்சூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் திருச்சூர் மாவட்ட போலீஸ் கமி‌ஷனர் யதீஷ் சந்திரன் உள்ளிட்ட போலீசார் மனோகரன் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் மனோகரனை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்தி செல்வதும், அந்த குருவாயூர் ரோட்டில் செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் குருவாயூருக்கு விரைந்து சென்று தேடினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள பிரபலமான கோவிலின் பின்புறத்தில் மனோகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவரங்காடு ரெயில்நிலைய பகுதியில் நின்ற அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவரங்காடு பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், மனோகரன் தினமும் வீட்டிற்கு செல்வதை இந்த 3 பேரும் கடந்த சில நாட்களாகவே நோட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று இவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேரும் இவரது காரை வழிமறித்தனர். பின்னர் அவரை மிரட்டி காரில் திருவரங்காடு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். அப்போது அவரிடம் காரில் வைத்து பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து சத்தம் போட்டார். இதனால் நாங்கள் அவரது வாயில் துணியை வைத்து அடைத்தோம். இதில் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார்.

இதையடுத்து அவர் வைத்திருந்த பணத்தை எடுத்து கொண்டு அவரது உடலை குருவாயூர் பகுதியில் வீசி விட்டு சென்றதாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். ஆனால் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். தொடர்ந்து அந்த 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News