செய்திகள்
உச்ச நீதிமன்றம்

பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2019-10-15 07:45 GMT   |   Update On 2019-10-15 07:45 GMT
பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
புதுடெல்லி:

பட்டாசு வெடிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு உற்பத்திக்கும், அதனை வெடிப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதுபோன்ற கெடுபிடி காரணமாக சிவகாசியில் பட்டாசு தொழில் கடும் பாதிப்புக்குள்ளானது. 

உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் இறுதி தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்ற அச்சமும் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டாசு வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாப்டே, அயோத்தி வழக்கை விசாரிப்பதால் பட்டாசு வழக்கை வேறு ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பட்டாசு வழக்குகளை விசாரிக்கும் அமர்வே விசாரிக்கும் என கூறி பட்டாசு உற்பத்தியாளர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.
Tags:    

Similar News