செய்திகள்
போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்

சோனியா காந்தி குறித்து சர்ச்சை கருத்து: அரியானா முதல் மந்திரிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

Published On 2019-10-14 14:04 GMT   |   Update On 2019-10-14 14:04 GMT
சோனியா காந்தியை செத்த எலியுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்த அரியானா முதல் மந்திரிக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

அரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், பாஜக கட்சியின் மூத்த தலைவரும், அரியானா முதல் மந்திரியுமான மனோகர் லால் கத்தார் அம்மாநிலத்தின் சோனிபேட் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தற்காலிக தலைவர் சோனியா காந்தி மீது கடுமையாக சாடினார். 

'செத்த எலியை கண்டுபிடிக்க மலையை குடைவது போல் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை கண்டுபிடிக்க மூன்று மாதங்களாக தேடி யாரும் கிடைக்காமல் மீண்டும் சோனியா காந்தியே தலைவராக வந்துள்ளார்' என வேடிக்கையாக தெரிவித்தார்.



மனோகர் லால் கத்தாரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து காங்கிரஸ் கட்சியினரிடயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அரியானா முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று காங்கிரஸ் மகளிர் அணியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறுகையில்,' மனோகர் லால் கத்தாரின் கருத்து சோனியா காந்திக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெண்களுக்கும் எதிராக உள்ளது. இதன் மூலம் அவர் பெண்களை மதிப்பதே கிடையாது என்பது தெரிய வந்துள்ளது’ என தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டவுடன் ’இனி அரியானாவில் உள்ள ஆண்கள் காஷ்மீருக்கு போய் அங்குள்ள அழகான பெண்களை திருமணம் செய்து இங்கு அழைத்து வரலாம்’ என முன்னர் கத்தார் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News