செய்திகள்
கர்தார்பூர் பாதை பணிகள்

பாகிஸ்தானை இணைக்கும் கர்தார்பூர் பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Published On 2019-10-12 12:09 GMT   |   Update On 2019-10-12 12:09 GMT
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதையை திறந்து வைக்க நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்கிறார்.
புதுடெல்லி:

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதை திறந்து வைக்க நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்கிறார்.

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.

அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
 
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.



இருநாடுகளின் வெளியுறவுத்துறை இணை செயலாளர்கள் மட்டத்தில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவில் இருந்து கர்தார்பூர் பாதை வழியாக சீக்கிய ஆலயத்துக்கு வரும் யாத்ரீகர்கள் ஆண்டு முழுவதும் விசா இல்லாமல் வருவதற்கு பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.
 
இந்தியர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் கர்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறக்கப்படும் இந்த பணிகளுக்கான பாகிஸ்தான் நாட்டு திட்ட இயக்குநர் அட்டிப் மஜித் கடந்த மாதம் தெரிவித்தார்.

இந்நிலையில், கர்த்தார்பூர் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள டேரா பாபா நானக் நகருக்கு நவம்பர் 8-ம் தேதி வருவதாக மத்திய உணவுப்பொருள் பதப்படுத்தும் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று தெரிவித்துள்ளார்.
 
Tags:    

Similar News