செய்திகள்
6 பேர் கொல்லப்பட்ட வீட்டுக்கு ஜோளியை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்த காட்சி.

கேரளாவில் 6 பேர் கொலை நடந்த வீட்டில் கைதான பெண்ணின் டைரி-சயனைடு பாட்டில் மீட்பு

Published On 2019-10-12 10:27 GMT   |   Update On 2019-10-12 10:27 GMT
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 6 பேர் கொலை நடந்த வீட்டில் இருந்து கைதான பெண்ணின் டைரி, சயனைடு பாட்டிலை போலீசார் மீட்டனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயியைச் சேர்ந்தவர் ஜோளி. ஜோளியின் கணவர் ராய் தாமஸ். இவரும், இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 6 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். கடந்த 2002 முதல் 2016-ம் ஆண்டுக்குள் இந்த சம்பவங்கள் நடந்தன.

இது தொடர்பாக ராய் தாமசின் சகோதரர் ரோஜோ தாமஸ் கொடுத்த புகாரின்பேரில் ஜோளி கைது செய்யப்பட்டார். சயனைடு கொடுத்து கணவர் உள்பட 6 பேரை கொன்றதாக ஜோளி ஒப்புக்கொண்டார்.

ஜோளிக்கு சயனைடு வாங்கிக் கொடுத்த நகைக்கடை ஊழியர் பிரஜி குமார் மற்றும் மேத்யூ ஆகியோரையும் கைது செய்த போலீசார் அவர்களை 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

நேற்று ஜோளியையும், மேத்யூவையும் கொலை நடந்த வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்றனர். அங்கு ஜோளியின் அறை மற்றும் கொலை அரங்கேறிய பகுதிகளில் சாட்சியங்களை சேகரிக்கும் பணி நடந்தது.

வீட்டிற்குள் ஒவ்வொருவரையும் எங்கெங்கு, எப்படி கொலை செய்தேன் என்பதை போலீசாரிடம் ஜோளி நடித்து காட்டினார். மேலும் கொலைக்கு பயன்படுத்திய சயனைடு பாட்டிலையும் எடுத்து கொடுத்தார்.

இதில் ஒரு பாட்டிலில் இருந்த சயனைடு முழுவதும் காலியாகி இருந்தது. இன்னொரு பாட்டிலில் சிறிதளவு சயனைடு இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோளியின் டைரி, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

கொலை நடந்த வீட்டில் ஜோளி, பதட்டமின்றி போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் அவரை போலீசார் அவர், அடிக்கடி சென்று வந்த பியூட்டி பார்லர், என்.ஐ.டி. வளாகம், 2-வது கணவரின் முதல் மனைவி சிலி இறந்த பல் ஆஸ்பத்திரி ஆகியவற்றிற்கும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

ஜோளியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது பலமுறை அவர் கோவை சென்றிருப்பது தெரிய வந்தது. இது பற்றி உறவினர்களிடம் கேட்டபோது, ஆண் நண்பர் ஒருவருடன் அவர் அடிக்கடி கோவைக்கு சென்று வருவார் என தெரிவித்தனர்.

இதனை ஜோளி மறுத்தார். என்றாலும் போலீசார் ஜோளியை கோவைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ஜோளியின் போலீஸ் காவல் முடியும் முன்பு அவர், கோவைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்காகவும், உல்லாச வாழ்க்கைக்காகவும் நடந்த இந்த கொலைகள் பற்றி விரிவான விசாரணை நடத்தி, கொலையாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா இன்று கோழிக்கோடு வடகரா செல்கிறார். அங்கு கைதான பெண் ஜோளியிடம் நேரில் விசாரணை நடத்துகிறார். பின்னர் 6 பேர் கொலை சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினருடனும் ஆலோசனை நடத்துகிறார்.


Tags:    

Similar News