செய்திகள்
பிரதமர் மோடி

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் - பிரதமர் மோடி நாளை பிரசாரம்

Published On 2019-10-12 07:19 GMT   |   Update On 2019-10-12 10:33 GMT
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி தனது பிரசாரத்தை ஜல்கான் பகுதியில் இருந்து நாளை தொடங்குகிறார்.
மும்பை:

மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அமைத்து உள்ளன. பா.ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 123 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு தலைவர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.



பா.ஜனதாவின் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று மும்பை தஹிபூர் பகுதியில் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார் என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

மோடி தனது பிரசாரத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்கான் பகுதியில் இருந்து தொடங்குகிறார். அதன்பின் சகோலியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 16-ந்தேதி அகோலா, பன்வெல், பர்தூர் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

17-ந்தேதி பார்லி, புனே, சதாரா ஆகிய இடங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின் 18-ந் தேதி மும்பையில் மோடி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் மோடி பிரசாரம் செய்ய இருப்பது பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Tags:    

Similar News