செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி நாளை மும்பை வருகை: தாராவி, சாந்திவிலியில் பிரசாரம்

Published On 2019-10-12 02:03 GMT   |   Update On 2019-10-12 02:03 GMT
நாளை மும்பை வரும் ராகுல் காந்தி தாராவி, சாந்திவிலியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
மும்பை :

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று இருந்தார். இதை விமர்சித்து பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், எதிர்க்கட்சிகள் தோ்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதால் தான் ராகுல்காந்தி மராட்டியத்துக்கு பிரசாரத்துக்கு வரவில்லை என கூறியிருந்தார்.

இந்தநிலையில் ராகுல் காந்தி மும்பைக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளார். அவர் தாராவி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வர்ஷா கெய்க்வாட்டுக்கு ஆதரவாக பொது கூட்டத்தில் பேசுகிறார். இதேபோல சாந்திவிலியில் காங்கிரஸ் வேட்பாளர் நசீம்கானுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதுதவிர நாளை லாத்தூர் மாவட்டம் அவ்சா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பாஸ்வராஜ் பாட்டீலை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார். அவ்சா தொகுதியில் பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் நேர்முக உதவியாளர் அபிமன்யு பவார் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வருகிற 15-ந் தேதியும் ராகுல்காந்தி மராட்டியத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News