செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

வைரல் வீடியோவில் நடனமாடுவது பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரா?

Published On 2019-10-10 06:22 GMT   |   Update On 2019-10-10 06:22 GMT
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் நடனமாடுவது பிரதமர் மோடியின் தாயார் என கூறப்படுகிறது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



குஜராத் மாநிலத்தவர் மத்தியில் பிரபல கலாச்சார மற்றும் ஆன்மீக வழிபாடுகளில் ஒன்று தான் கர்பா நடனம் ஆடுவது. இந்து கடவுள் சக்தியை வழிபடுவோர் நவராத்திரி காலக்கட்டத்தில் கர்பா நடனமாடுவது அம்மாநில மக்களின் நீண்ட கால வழக்கமாக இருந்து வருகிறது.

தற்சமயம் சமூக வலைத்தள மோகம் காரணமாக ஒவ்வொரு நிகழ்வும் நாடு முழுக்க டிரெண்ட் ஆகி வருகிறது. அவ்வாறு கர்பா நடன வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவ்வாறு வைரலான வீடியோ ஒன்றில் வயதான மூதாட்டி பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் என கூறப்பட்டுள்ளது.



ஆய்வில் அந்த வீடியோவில் நடனமாடுவது ஹீரா பென் இல்லை என தெரியவந்துள்ளது. நரேந்திர மோடி தாயார் என கூறி வைரலாகும் வீடியோ 2017 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ செப்டம்பர் 30, 2017 இல் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக அக்டோபர் 20, 2017 ஆம் ஆண்டில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரன் பேடி இதே வீடியோவினை ட்விட் செய்து, வீடியோவில் கர்பா ஆடுவது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் என குறிப்பிட்டிருந்தார். பின் வீடியோவில் இருப்பது பிரதமர் மோடியின் தாயார் இல்லை என அறிந்து, தான் பதிவிட்ட ட்விட் தவறானது என அவர் விளக்கினார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தரவுகளின் உண்மைத் தன்மை அறியாமல் அவற்றை பகிர வேண்டாம். வைரல் தகவல்களில் உண்மை இருப்பதை உறுதிப்படுத்திய பின் அவற்றை பகிர்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்தி பாதிப்பு மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News