செய்திகள்
ராஜ் பப்பர்

உ.பி.காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கம்

Published On 2019-10-08 06:37 GMT   |   Update On 2019-10-08 06:37 GMT
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக அஜய்குமார் லல்லு நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார். பிரியங்கா தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரசுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த மோசமான தோல்வியால் காங்கிரஸ் பொதுச்செயலாளரான அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய பிரியங்கா முடிவு செய்தார். இதற்காக அவர் அடிமட்ட அளவிலான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை கடந்த சில மாதங்களாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில காங்கிரசில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக அஜய்குமார் லல்லு நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்காவின் திட்டத்தின்படி காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளது.

அஜய்குமார் லல்லு உத்தரபிரதேச காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்தார். காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது இடத்தில் ஆராதானா மிஸ்ரா சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கட்சியை பலப்படுத்தும் வகையில் 12 பொதுச்செயலாளர்கள், 4 துணைத்தலைவர்கள், 24 செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022-ம் ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டு பிரியங்கா இப்போதே அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.

அஜய்குமார் லல்லுவின் சிறப்பான செயல்பாடு பிரியங்காவை ஈர்த்துள்ளது. அவர் நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இதனால் அவருக்கு இந்த புதிய பதவி கிடைத்துள்ளது.
Tags:    

Similar News