செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் திடீர் வெளிநாடு பயணம்: தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் - காங்கிரஸ்

Published On 2019-10-07 12:09 GMT   |   Update On 2019-10-07 12:09 GMT
ராகுல் காந்தி திடீரென்று வெளிநாடு சென்று விட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென்று வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் இதுபோல் அறிவிக்கப்படாத வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தற்போது எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று விட்டது தொடர்பாக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



இவ்விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஜனநாயக மரபுகளின்படி பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு. ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எப்போதுமே மதிப்பளிக்கப்பட்டுள்ளது. தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தனிப்பட்ட பயணங்களையும்கூட பொதுவாழ்வின் ஒரு அங்கமாக சித்தரிக்க முற்படுபவர்கள், தனிநபர் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரனவ் ஜா தெரிவித்துள்ளார்.

இதேபோல், ’ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களை பொதுவாழ்வுடன் இணைத்து பார்க்க கூடாது’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News