செய்திகள்
சோனியா காந்தி - ஷேக் ஹசினா

சோனியா காந்தி டிசம்பர் மாதம் வெளிநாடு பயணம்

Published On 2019-10-06 14:42 GMT   |   Update On 2019-10-06 14:42 GMT
வங்காளதேசம் நாட்டின் 50-வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்க வருமாறு ஷேக் ஹசினா இன்று விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவைர் சோனியா காந்தி டிசம்பர் மாதம் டாக்கா செல்கிறார்.
புதுடெல்லி:

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவை டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவியேற்றமைக்காக ஷேக் ஹசினாவுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.



பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்கு இந்தியா முன்னர் செய்த உதவிகளையும் வங்காளதேசம் நாட்டின் முதல் ஜனாதிபதியும் தனது தந்தையுமான முஜிபுர் ரஹ்மானுக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இருந்த ஆழ்ந்த நட்பையும் சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது  ஷேக் ஹசினா நினைவுகூர்ந்தார்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வங்காளதேசம் நாட்டின் 50-வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்க சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வர வேண்டும் என ஷேக் ஹசினா அப்போது அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட சோனியா காந்தி வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசம் நாட்டுக்கு செல்வதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னர் கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட தற்போதைய வங்காளதேசம் நாட்டை தனிநாடாக பிரிப்பதற்கு பாகிஸ்தானுடன் இந்தியா 1971-ம் ஆண்டில் போர் தொடுத்ததும் போரின் இறுதியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணாகதி அடைந்ததும் நினைவிருக்கலாம்.


Tags:    

Similar News